தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, “கடந்த ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இல்லை. வரும் காலங்களிலும் மக்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம். தொழிலாளர் நலன், நாட்டு நலன், மாநில உரிமைகள் ஆகியவற்றில் எங்களுக்கு எப்போதும் சமரசம் கிடையாது. தமிழ்நாடு மக்கள் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க தேர்ந்தெடுத்துள்ளதால், மக்கள் தீர்ப்பை மதித்து, அவர்கள் ஆட்சி அமைக்க நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ளோம்.
மக்களாட்சி அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது, மற்றொரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது என்ற அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆதரவு. இந்த அரசு நல்லாட்சியையும் மதச்சார்பின்மையையும் தொடரும் வரை எங்கள் ஆதரவு நீடிக்கும். வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்பதற்காக அரசுக்கு நெருக்கடியோ, முட்டுக்கட்டையோ நாங்கள் ஏற்படுத்த மாட்டோம். அதேநேரம் எளிய மக்களின் குரலாக எப்போதும் ஒலிப்போம்.
கல்வி மற்றும் மருத்துவத்தை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இடதுசாரிகளின் அடிப்படைக் கொள்கை. தற்போதைய சூழல் அதற்கு இன்னும் முழுமையாகக் கனியவில்லை என்றாலும், அந்த இலக்கை நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு நாகரிக அரசின் பொறுப்பு என்பது கல்வியையும் மருத்துவத்தையும் பொதுத்துறையாக வைத்திருப்பதுதான்.

விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இப்போதுதான் பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க அரசு, இந்த பயிர்க்கடன்களைப் படிப்படியாகவாவது முழுமையாக ரத்து செய்வதற்கான வாக்குறுதியை வழங்க வேண்டும்.
சட்டமன்றம் என்பது ஜீவா, ராமமூர்த்தி, ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜர் போன்ற மாபெரும் ஆளுமைகள் வீற்றிருந்த இடம். அது நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய, கற்க வேண்டிய இடம். அங்கு நிலவும் நல்ல அரசியல் பண்புகளை இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும். தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானது. தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது.

தோல்வி இல்லை என்றால் வெற்றிக்குப் பொருளே இல்லை. முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருமே ஒருவரையொருவர் உடல்மொழியாலோ, வார்த்தைகளாலோ தாழ்வுபடுத்தக் கூடாது. முதல்வர் “தந்தையைத் தேடுகிறேன்” என்று பேசியதும், அதற்குப் மறுமொழியாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியதும் நமது பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. இத்தகைய தனிநபர் விவாதங்களைக் கடந்து, மக்கள் பிரச்னைகளில் நாம் கூட்டாகச் சிந்திக்க வேண்டும்.
காவிரி நீர் தமிழ் மண்ணை நோக்கி வருவது இயற்கை நியதி, அதை யாரும் தடுக்க முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவது நீர் பிடிப்புப் பகுதிகளைப் பாதிக்கும் என்பதால் அங்கு அணை கட்டக் கூடாது. கர்நாடக அரசு இந்த விஷயத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளும் இரயில்வேயும் எப்படி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அதேபோல் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரையும், கனிம வளங்களையும் பொதுவுடைமையாக்க வேண்டும். இதுகுறித்த தொலைநோக்கு விவாதம் நாடாளுமன்றத்தில் நடக்க வேண்டும்” என்றார்.
