கமேனியின் இறுதிச்சடங்கு… பிரதமர் மோடிக்கு அழைப்பு..! – Kumudam

Spread the love

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் ராணுவத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் ஒரு பேரக்குழந்தையும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மேற்கு ஆசிய அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பிராந்திய பதற்றத்தையும் தீவிரப்படுத்தியது.

இஸ்லாமிய மரபுகளின்படி ஒருவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் உடல் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இருப்பினும், கமேனியின் மரணம் நிகழ்ந்த காலகட்டத்தில் மேற்கு ஆசியாவில் நிலவிய போர்ச் சூழல், பாதுகாப்பு சவால்கள் மற்றும் சர்வதேச பதற்றம் காரணமாக அவரது இறுதிச் சடங்குகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் வரும் ஜூலை 4 முதல் 7 வரை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் புனித நகரமான கோம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, இறுதி அஞ்சலி நிகழ்வு மற்றும் அடக்க நிகழ்ச்சி ஜூலை 9-ஆம் தேதி மஷாத் நகரில் நடைபெறும் என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வ அழைப்பை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஈரான் பயணம் மேற்கொள்வாரா என்பது குறித்து இந்திய அரசோ அல்லது பிரதமர் அலுவலகமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இன்னும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சீனா, ரஷ்யா, கத்தார், பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தங்கள் நாட்டின் உயர்மட்ட தூதுக்குழு இந்த நிகழ்வில் பங்கேற்கும் என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *