“சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்’ என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.
திமுகவில் ஏற்கனவே வெற்றிகொண்டான் இடத்தை நிரப்ப வந்த அவரது மகன், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என இறங்கிப் பேசும் ஆட்கள் எத்தனையோ பேர் இருக்கிற சூழலில் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இப்போது இவரும் கிளம்பியிருக்கிறார் போல.
அதிமுகவிலோ ‘அவனை அன்னைக்கே உரிச்சிருக்கணும்’ எனப் பேசிய ஆர்.பி.உதயகுமாரும் சகட்டுமேனிக்குப் பேசி வருகிறார். இப்படிப் பேசும் இன்னும் சிலரும் கூட இந்தக் கட்சியிலும் இருக்கிறார்கள்
திமுக, அதிமுகவால் தவெகவின் வெற்றியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. மேல்மட்டத்தில் மேற்படி கட்சிகளின் தலைவர்களே ‘மூணு மாசத்துல முடிஞ்சிடும்’, ‘ஆறு மாசத்துல ஆட்சி மாறுது’ எனப் பேசி வருவதால் கீழ் மட்டத்தில் இப்படிக் கீழிறங்கி பேசத் தொடங்கி விடுகின்றனர்.
‘தரைமட்டத்துக்கு இறங்கிப் பேசுங்க, அப்பதான் அவங்களும் பதிலுக்கு வருவாங்க, அதை வச்சு சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும்’ எனக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா எனத் தெரியவில்லை.
முதல்வர் விஜய்யைப் பேசினால் ‘கவனிக்கப்படுவோம்’ என்கிற விளம்பர உத்தியாகக் கூட இருக்கலாமென்கின்றனர் சிலர்.

ஆனால் இந்தப் பேச்சுகள் என்ன விளைவை ஏற்படுத்துமென பேசுபவர்கள் யோசிப்பதில்லை.
ஏற்கனவே ‘நீங்க ரெண்டு பேரும் ஆண்டது போதும்’ என்றுதான் புதிதாக வந்த அந்தக் கட்சிக்கு 107 சீட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். பெரும்பான்மைக்குச் சில உறுப்பினர்களே போதுமென்கிற சூழலில் அந்த ஆதரவையும் பெற்றே ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய். 14 பேர் தற்போது தவெக அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லையென்பது அரசியலை ஓரளவுக்குத் தெரிந்தவர்களுக்கே புரியும். அப்படியிருக்க ‘புலி வருது, புலி வருது’ என ‘ஆட்சி கவிழுது’ டயலாக்கைப் பேசிக் கொண்டிருப்பது மக்களிடம் எரிச்சலை உண்டாக்காதா எனச் சிந்திப்பதில்லை.