போட்டியின் முடிவு ஒருபுறம் இருக்க, ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த நிகழ்வுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தோல்வியால் ஏற்பட்ட கண்ணீரும், கவலையும் இருந்தாலும், ஜப்பானிய ரசிகர்கள் தங்கள் கடமையை மறக்கவில்லை.
இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர்கள் பின்பற்றி வரும் வழக்கப்படி, தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை முழுமையாக சுத்தம் செய்யத் தொடங்கினர். குப்பைகளை அகற்றி, இருக்கைகளை நேர்த்தியாக சரிசெய்து, அந்தப் பகுதி தாங்கள் வருவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல் சுத்தமாக மாற்றிவிட்டுச் சென்றனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் மரியாதை செலுத்தும் அவர்களின் இந்தப் பண்பு, மீண்டும் ஒருமுறை உலகை வியக்க வைத்துள்ளது.
இந்த முறை, ஜப்பானிய ரசிகர்களுடன் பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமர் (Streamer) “ஐஷோஸ்பீடும்’ (IShowSpeed) இணைந்து மைதானத்தை சுத்தம் செய்தார். ஜப்பானிய ரசிகர்களுடன் சேர்ந்து அவரும் குப்பைகளை அகற்றும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவியது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியது. “ஸ்பீட், ஆட்டத்தைப் பார்ப்பதில் இருந்து ரசிகர்களுடன் சுத்தம் செய்ய உதவியது வரை, அவருக்கு எங்களின் மரியாதை,” என்று ஒரு ரசிகர் பாராட்டினார்.
அதேசமயம், “ஜப்பானியர்கள் மரியாதையின் காரணமாக இதைச் செய்கிறார்கள், ஆனால் அவர் கவன ஈர்ப்புக்காக (engagement) செய்கிறார். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது,” என்று மற்றொருவர் விமர்சித்தார். எப்படி இருப்பினும், ஜப்பானியர்களின் இந்தச் செயல்பாடு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
களத்தில் ஜப்பான் அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர்களின் ரசிகர்கள் தங்கள் நாட்டின் மாண்பையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடந்துகொண்டு, அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இந்தச் செயல், மைதானத்திற்கும், போட்டிக்கும், சக மனிதர்களுக்கும் அவர்கள் அளிக்கும் மரியாதையின் அமைதியான வெளிப்பாடாக அமைந்துள்ளது.