“தற்போது காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் த.வெ.க கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா?”
“வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தலில், த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறோம். எனவே கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கட்சியில் ஆங்காங்கே துடிப்புமிக்கத் தலைவர்களை உருவாக்குவதற்கான பணிகளையும் தற்போது செய்துவருகிறோம். இதெல்லாம் கடந்தகாலத்தில் கிடையாது. புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகு வந்த மாற்றங்கள்!”
“நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் வருடங்கள் கடந்துவிட்ட சூழலிலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லையே… இந்த நிலையில், த.வெ.க ஆட்சியிலாவது விசாரணையில் முன்னேற்றம் கிடைக்குமா?”
“வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்துவிட்டார்கள். விசாரணையும் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க அரசாங்கம் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நானும் கோரிக்கை வைக்கிறேன்.”

“அண்மையில், காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது நெல்லை மாவட்ட காங். தலைவர்கள் பொதுவெளியிலேயே மோதிக்கொண்டார்களே… காங்கிரஸின் கோஷ்டி மோதல் பிரச்னை எப்போதுதான் முடிவுக்கு வரும்?”
“காங்கிரஸ் கட்சி, 140 ஆண்டுகளைக் கடந்த மிகப்பெரிய பாரம்பர்யம் கொண்ட பேரியக்கம். கோடிக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட இந்த கட்சியில், அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படுவது போன்ற சின்னச்சின்ன சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஒருவகையில் இது கட்சியின் ஜனநாயகத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆனாலும்கூட இந்த விஷயத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சியாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை உறுதியாக கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் செய்துவருகிறோம்.
எது எப்படியிருந்தாலும், கட்சி என்று வரும்போது எங்களது வேற்றுமைகளை மறந்து, கட்சியின் முகமாக இருந்துவரும் ராகுல்காந்தி தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்போம்.”