அப்பாவின் நம்பிக்கை… மகளின் உழைப்பு… NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா! | Father’s Faith, Daughter’s Grit: Sandhiya’s NEET Success Story

Spread the love

NEET… இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குடும்பத்தின் நம்பிக்கை என எல்லாம் சேர்ந்த ஒரு சாதனை.

அப்படிப்பட்ட ஒரு ஊக்கமான வெற்றிக் கதையைத்தான் இந்த முறை பார்க்கப் போகிறோம். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி சந்தியா, NEET தேர்வில் 720-க்கு 571 மதிப்பெண்களும், CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 461 மதிப்பெண்களும் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரி இருக்கையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது இரவு முழுக்க செய்த கடின உழைப்பு, அம்மாவின் கனவை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதி, அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தப் பயணத்தை நம்மோடு மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார் சந்தியா.

“ரிசல்ட் வந்ததும் வீட்டுல எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எங்களுக்கு அது ஒரு பெரிய பரிசு கிடைச்ச மாதிரி இருந்துச்சு. நாங்க எதிர்பார்த்த மாதிரியே நல்ல ரிசல்ட் வந்ததால எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாங்க,” என்று புன்னகையுடன் சொல்கிறார்.

தன்னுடைய குடும்பத்தைப் பற்றி பேசும்போது, “எங்க அப்பா தினசரி தொழில் பண்றாங்க. அம்மா இப்போ இல்லை. அப்பா அதிகம் படிக்கல. ஆனா என் மேல அவங்க வைத்திருந்த நம்பிக்கையும், கொடுத்த ஊக்கமும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துச்சு,” என நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு, “டாக்டர் ஆகணும்னு முதல்ல ஆசைப்பட்டது எங்க அம்மாதான். “உன்னால முடியும்’ன்னு எப்போதும் எனக்கு தைரியம் கொடுத்தாங்க. அவங்க கனவை நிஜமாக்கணும்னு நினைச்சுதான் அதையே என்னோட கனவாவும் மாற்றிக்கிட்டேன்,” என்று கூறுகிறார்.

தனது படிப்பு முறையைப் பற்றி, “எல்லாரும் தூங்குன பிறகு இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை படிப்பேன். அந்த நேரம் ரொம்ப அமைதியா இருக்கும். அதனால முழு கவனத்தோட படிக்க முடியும்,” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *