”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” – மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

Spread the love

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

இவரது தாய் வான்மதி என்கிற பானுமதி நேற்று திடீரென உயிரிழந்தார். நீடமாங்கலம் தாலுகாவில் எடகீழையூரில் உள்ள ராஜராஜன் இல்லத்தில் பானுமதி உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான த.வெ.க-வினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் அரசியல் நாகரீகத்துடன் ராஜராஜன் அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தியது கவனம் பெற்றது.

மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் அம்மானின் உடல்
மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் அம்மானின் உடல்

இந்நிலையில், த.வெ.க வேட்பாளர் யு.வி.எம்.ராஜராஜன், ”15 நாளுக்கு முன்னாடி என் அம்மா கழுத்து, காதில் கிடந்த நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு எனக்கு பணம் கொடுத்தார். நீ ஜெயிக்கணும்டானு சொல்லி எனக்கு பக்கபலமா இருந்தார். தேர்தல் முடிவு வருவதற்குள்ளேயே எங்களைத் தவிக்க விட்டுட்டு போயிட்டார்” என்று கதறியிருக்கிறார். இது மன்னார்குடி பகுதியில் அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இது குறித்து த.வெ.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், ”யு.வி.எம்.ராஜராஜன் ஆரம்பத்தில் இருந்தே த.வெ.க-வில் இருக்கிறார். தி.மு.க, அ.தி.மு.க என அரசியல் கட்சிகளின் நெருக்கடிகளைச் சமாளித்து த.வெ.க-வை வளர்த்தவர். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 35,000 பேர் த.வெ.க-வில் உறிப்பினர்களாக உள்ளனர்.

தலைவர் விஜய் மன்னார்குடி தொகுதியில் யு.வி.எம்.ராஜராஜன் போட்டியிடுவார் என்றதுமே பிரதான அரசியல் கட்சிகளுக்குப் புளியைக் கரைத்தது. குறிப்பாக தி.மு.கவினர் ராஜராஜன் மீது பல விமர்சனங்களைக் கிளப்பி விட்டனர்.

தவெக ப்ளக்ஸ்
தவெக ப்ளக்ஸ்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் ஆதாரமில்லாத கட்டுகதைகளை அள்ளி விட்டனர். இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புவதாகக் கூறி காவல் நிலையத்தில் ராஜராஜன் புகார் அளித்தார்.

இந்நிலையில் வேட்பாளராக களமிறங்கிய யு.வி.எம்.ராஜராஜன் தேர்தல் களத்தில் அசுர பாய்ச்சல் காட்டினார். போதுமான பணபலம் இல்லாத நிலையிலும் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இணையாகப் பிரச்சாரம் செய்தார்.

தொகுதிக்குள் மக்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் சில அரசியல் கட்சியினர் செல்வாக்கு படைத்த குறிப்பிட்ட அந்த வேட்பாளரிடம் ராஜராஜன் பணம் வாங்கி விட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் எனக் கிளப்பி விட்டனர். ஒரு பக்கம் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டார்.

மறுபக்கம் இது போன்ற வதந்திகள் மூலம் வாக்கு சிதைவை ஏற்படுத்த சிலர் முயன்றனர். ஆனால் இவை மக்களிடம் எடுபடவில்லை. கடைசி கட்டத்தில் ராஜராஜன் அம்மா தன் கழுத்தில், காதில் தான் அணிதிருந்த நகையைக் கழட்டி அடமானம் வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்.

மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன்
மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன்

தன் புள்ளை விஜய்யையும், மக்களையும் நம்பி களத்தில் இறங்கியிருக்கான். அவனுக்கு நாம் உறுதுணையாக இருக்கணும் எனத் தைரியப்படுத்தியுள்ளார்.

‘எல்லா நகையையும் எனக்கு கழட்டி கொடுத்துட்ட பொட்டு நகை இல்லாம அம்மா கிடக்குது. இதைப் பாக்குறதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு. வாக்கு எண்ணிக்கை தினத்தில் என் அம்மாவின் ஆசியுடன் எனக்கு அதிசயம் நடக்கும். நானும் கடுமையாக உழைச்சிருக்கேன். மக்கள் என்னைக் கைவிட்டிருக்க மாட்டார்கள். அம்மா ஆசியோடு நான் ஜெயிப்பேன்’ என்று தன் அம்மா உடல் வைக்கப்பட்டுள்ள கூலர் பாக்ஸில் தலை சாய்ந்து கொண்டு புலம்புகிறார் ராஜராஜன். அவரைத் தேற்ற முடியாமல் நிற்கிறோம் என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *