India
oi-Vigneshkumar
பஸ்தர்: இந்தியாவின் நக்சலிச எதிர்ப்பு நடவடிக்கையில் 2026ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர்கூட உயிரிழக்கவில்லை என்றும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிச அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவில் இன்றைய தினம் நாடு முழுக்க தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்தாண்டு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தருக்கு சென்ற பிரதமர் அங்கு பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். மேலும், அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேச்சு
நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார். பாஜக ஆட்சியில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு உச்சபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், “நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், நாட்டின் எதிரிகளை தோற்கடிக்க வேண்டும். அரசியல் லாப நஷ்டத்தை தாண்டி இதில் முடிவெடுக்க வேண்டும். முன்பு ஆட்சி செய்தவர்களுக்கு அந்த உறுதி இல்லாமல் இருந்தது. ஆனால், 2014க்கு பிறகு நிலைமை மாறியது.
நக்சல்கள்
கடந்த காலங்களில் நக்சல்களை விட அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். ஆனால், நிலைமையை மெல்ல மாற்றி காட்டியிருக்கிறோம். கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர்கூட உயிரிழக்கவில்லை. 47 ஆண்டுகளில் முதல்முறையாக இத்தகைய சாதனை நடந்துள்ளது. இது அரசின் கொள்கைகளுக்கும் பாதுகாப்பு படையினரின் துணிச்சல், கட்டுப்பாடு, உறுதிக்கும் கிடைத்த வெற்றி.
மோசமான தாக்குதல்
2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புகள் நக்சல்களின் உயிரிழப்புகளைவிட அதிகமாக இருந்தது. அப்போதைய அரசுகள் நக்சலிசத்தை குணப்படுத்த முடியாத நோயாகக் கருதி, அதை எதிர்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டன. ஒரே ஆண்டில் 2,000 நக்சல் தாக்குதல்கள் வரை நடந்தன. பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி பொதுமக்களும் தாக்கப்பட்டனர். நக்சல்கள் சில பகுதிகளில் மக்களின் வாக்குரிமையைக்கூடப் பறித்தனர்.
2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் தந்தேவாடாவில் நக்சல்களுடனான மோதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.. அதே ஆண்டில் அந்த மாவட்டத்தில் மற்றொரு தாக்குதலில் 44 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.. சத்தீஸ்கரில் மட்டும் பல ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். அதையெல்லாம் நாம் மாற்றி காட்டி இருக்கிறோம்.
நக்சல்கள் இல்லாத முதல் தீபாவளி
இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பானது .. நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிரான பல ஆண்டுகள் நீடித்த போராட்டத்தில் நாடு வெற்றி பெற்றுள்ள முதல் தீபாவளி இது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிசத்தில் இருந்து விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது.
140 கோடி இந்தியர்கள் சார்பில் பாதுகாப்பு படையினரின் தியாகம், அர்ப்பணிப்பு, சேவைக்கு நன்றி தெரிவிக்கவே பஸ்தருக்கு வந்திருக்கிறேன். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களை போலவே உள்நாட்டு பாதுகாப்பை காக்கும் படையினரும் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படையினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்” என்றார்.