விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் இரண்டு விமானிகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு விமானி, விமானத்தை வேண்டுமென்றே கீழே வீழ்த்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், அதை மற்றொரு விமானி தடுத்துப் போராடியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின்போது ஒரு விமானி கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை இஸ்ரேல் அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தச் சலசலப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள ‘தபூக்’ (Tabuk) என்ற சிவில் மற்றும் ராணுவ விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 180 இஸ்ரேலிய பயணிகள் உட்பட அனைவரும் விமானத்திற்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். விமானத்தைச் சுற்றி சவூதி பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். flydubai நிறுவனமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.