யோசித்துதான் மனு போட்டீங்களா? நீதிபதிகள் கேள்வி! பெரிய லீகல் டீம் இருந்தும்! திமுக சறுக்கியது எப்படி | Did you even think before filing the case: SC thrashes DMK in Karur sub case

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: கரூர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேச தடை கேட்ட இடையீட்டு மனுவை வாபஸ் பெற்றது திமுக. மிகப்பெரிய லீகல் டீம் வைத்திருக்கும் திமுக இந்த வழக்கில் கொஞ்சம் சொதப்பி உள்ளது. இந்த அவசர மனு திமுகவிற்கு பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நிறைய தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. சாட்சிகளை மனமாற்றம் செய்யும் விதத்தில் பேச்சுக்கள் பேசப்படுகிறது. சாட்சிகளை பாதிக்கும் விதமாக மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது அதுதொடர்பாக கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. முக்கியமாக முதல்வர் விஜய் கரூர் செல்ல கூடாது என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுகவின் மனுவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியது. அரசியல் ரீதியான மோதல்களுக்கு உச்சநீதிமன்றத்தை ஒரு இடமாக நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தனர்.

Did you even think before filing the case SC thrashes DMK in Karur sub case

இந்த சம்பவம் முக்கியமானது. மொத்தமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மனுவை நீங்கள் யோசித்துதான் தாக்கல் செய்தீர்களா? இதன் விளைவுகள் என்னவாகும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்? எப்படி இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள்?

உங்கள் அரசியல் மோதல்களை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மோதல்கள் வெளியே நடத்த வேண்டுமே தவிர, நீதிமன்றத்தை ஓர் அரசியல் களமாக மாற்றக்கூடாது, என்று நீதிபதிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், இந்த மனுவை தற்போதைய சூழலில் தொடர்ந்து விசாரிக்காமல் இருப்பதே நல்லது என்றும், இதன் பின்னணியில் உள்ள பல விளைவுகளை திமுக தரப்பு முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கவில்லை என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

திமுகவின் மனுவில் என்ன இருந்தது?

திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த மனுவில், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கு மற்றும் சிபிஐ விசாரணை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதை தவிர்த்து பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், அரசு வேலைவாய்ப்புகள் அல்லது நிவாரணங்கள் முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் திமுக கோரியிருந்தது.

நிவாரண உதவிகள் வழங்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக இருப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் சாட்சியங்களை திசைதிருப்பவோ அல்லது சிபிஐ விசாரணையைப் பாதிக்கவோ வாய்ப்புள்ளதாக திமுக கவலை தெரிவித்திருந்தது.

குறிப்பாக, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த ஜூலை 2 அன்று பேசுகையில், கரூர் விவகாரத்தில் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது என்றும் பேசியதாக திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய பேச்சுகள் ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் திமுகவே பொறுப்பு என்பது போன்ற ஒரு பிம்பத்தை பொதுமக்களிடையே உருவாக்க முயல்வதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள ஊடகங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதல்வர் விஜய்யின் கரூர் பயணங்களை உச்சநீதிமன்றம் முறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?.. முதல்வரின் பயணத்தை கட்டுப்படுத்த முடியாது என்று உங்களுக்கு தெரியாத என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தவெக நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளை இந்த வழக்கை மேற்பார்வையிடும் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *