பைலட்டை கத்தியால் குத்திய சக விமானி.. நடுவானில் கொட்டிய ரத்தம்.. 17,000 அடி உயரத்தில் நடந்த பயங்கரம் | Flydubai Flight Emergency: Pilots Clash Mid-Air, Plane Makes Emergency Landing in Saudi Arabia

Spread the love

International

oi-Vigneshkumar

டெல் அவிவ்: துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற பயணிகள் விமானத்தில் இரு விமானிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த மோதலால் பதறிப்போன பயணிகள், முதலில் விமானம் கடத்தப்பட்டதாக அஞ்சியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்துக்கு ஃப்ளைதுபாய் விமானம் புறப்பட்டது. சுமார் 180 இஸ்ரேல் பயணிகள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் வழக்கம் போலவே டேக் ஆஃப் ஆகியுள்ளது.

flight

விமானம்

ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான கண்காணிப்பு டேட்டாவில் எமர்ஜென்சி நம்பரான 7700 பதிவானது. பொதுவான எமர்ஜென்சியை குறிக்கும் இந்த குறியீடு பின்னர் 7500 ஆக மாற்றப்பட்டது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக விமானத்தில் ஏதோ நடந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சர்வதேச குறியீடு இது.

ஏற்கனவே ஹமாஸுடன் இஸ்ரேல் சண்டையிட்டு வரும் நிலையில், இதனால் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை கண்காணிக்க அந்நாடு போர் விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், அதன் பிறகே உண்மை என்னவென்று தெரிய வந்தது.

கடும் மோதல்

அதாவது விமானத்தில் இருந்த இரு விமானிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதே அவசரமாக தரையிறங்கியதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. சண்டையின்போது விமானிகள் தவறுதலாக கடத்தல் எமர்ஜென்சி குறியீட்டை பதிவிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் காக்பிட் பகுதியில் ரத்தம் இருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்ததாகவும், விமானிகளில் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு விமானிகளும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில் நிலைமை கையை மாறி செல்லும் அளவுக்கு போனது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இணைந்து மோதலை தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

கத்திக்குத்து

விமானத்தில் இருந்த மிரியம் என்ற பயணி, பயணத்தின்போது காக்பிட் பகுதியில் இருந்து சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் காக்பிட் கதவு திறக்கப்பட்டபோது உள்ளே ரத்தம் காணப்பட்டதாகவும், விமானிகளில் ஒருவர் தாக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பயணிகளும் விமானப் பணியாளர்களும் தலையிட்டு சண்டையை நிறுத்திய பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சரிவு

ஒரு கட்டத்தில் விமானம் திடீரென சுமார் 17,400 அடி உயரம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்த விமானம், இரண்டு நிமிடங்களில் 16,600 அடி அளவுக்கு சரிந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடத்தல் அச்சம் காரணமாக இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இஸ்ரேல் மக்களை பாதுகாப்பாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *