கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமான பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது.
கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டது.
யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.