Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை அமலுக்கு வரும்; இது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கொள்கையளவில் நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது, ” இந்த மசோதாவை ஏற்காமல் இருந்தால், 2011 மக்கள்தொகை அடிப்படையிலேயே பாஜக தொகுதி மறுவறை வரையறையை செய்து விடுவார்கள். 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% தொகுதிகள் எண்ணிக்கை உயர்வு என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை நாம் பிரதானமாக முன் வைத்தோம். அந்த இரண்டும் நிறைவேறி இருக்கிறது இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி ” என்று கூறினார்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தினால் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு என திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (நவம்பர் 27) மாலை தான் தொகுதி மறுவரையறை மசோதாவின் முழுமையான வரைவு நகல் வெளியானது. அதில் சில முக்கியமான பாயிண்டுகளை அப்படியே பார்ப்போம். அதன்பிறகு திமுக என்ன கூறி நிபந்தனையுடன் ஆதரவு என்பதையும் விளக்கமாக பார்ப்போம்.
(1) மக்களவையிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதுடன், தொகுதிகளுக்கான இடங்களின் ஒதுக்கீட்டை மறுசீரமைப்பது மற்றும் ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தையும் பிராந்தியத் தொகுதிகளாகப் பிரிப்பது ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகையில், மசோதாவின் நீண்ட தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.
(2) முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், விரைவில் மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்க வேண்டும். இதற்கு முன்பு, “அவ்வப்போது” ஆணையம் அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
(3) “மக்கள்தொகை” என்ற சொல்லுக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, “சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்” என்ற சொற்றொடருக்கு வரையறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களே இதற்குப் பொருந்தும்.
(4) ஆணையத்தின் கடமைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்மொழியப்படும் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப மக்களவையில் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும், மாநில சட்டமன்றங்களின் மொத்த இடங்களின் எண்ணிக்கையும் மறுசீரமைக்கப்பட வேண்டும். பிராந்தியத் தொகுதிகளாகப் பிரிக்கும் பணி சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(5) பெண்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகள், தொகுதி மறுவரையறை ஆணையம் பொருத்தமானது எனக் கருதும் முறையில் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்படும்.
(6) அரசியலமைப்புச் சட்டத்தின் 334A பிரிவின்கீழ் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், மொத்த இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பதற்கான புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பாயிண்டுகளின் படிதான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவை பார்த்த திமுக, இரண்டு முக்கியமான நிபந்தனைகளை வைத்தது. அதில் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% தொகுதிகள் எண்ணிக்கை உயர்வு என்ற இரண்டு நிபந்தனைகளை விதித்தது. இதனை பாஜக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மசோதாவை ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
திமுகவின் அறிவிப்பினை தொடர்ர்ந்து வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. திமுகவிற்கு 22 லோக்சபா எம்பிக்கள், 8 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கை பாஜகவிற்கு மசோதாவை நிறைவேற்ற உதவும்.
புதிய மசோதா வரைவில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை நிர்ணயித்து, மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் 50 சதவீதம் உயர்த்த உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஆண்டுக்குள் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நடைபெற வாய்ப்புள்ளது. இது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைப் பாதிக்கும். எனவே, கொள்கை அளவில் திமுக தொகுதி மறுவரையறையை ஆதரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில்எம்பிக்கள் எண்ணிக்கை 850 ஆக உயர உள்ளது. அதற்கு திமுக முக்கியமான காரணமாக இருக்க போகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் 39 ஆக உள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரப்போகிறது. இதற்கும் திமுகவின் ஆதரவு காரணமாக இருக்க போகிறது.

