“திகில் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் 75 ஆண்டுளாக தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் முதன் முறையாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
“புதுசா அமைக்கப்பட்டுள்ள மண் ரோட்டால் விமோசனம் அடைந்தது மக்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் தான்” என்கிறார்கள் போதமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்.
75 ஆண்டு கால கோரிக்கை சாத்தியமானது எப்படி?
மலைவாழ் மக்களிடம் கேட்ட போது,
“நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி, வெண்ணந்தூர் ஒன்றியம், கீழூர் ஊராட்சிக்கு உட்பட்டது தான் போதமலை. இங்கு கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஒற்றையடி பாதையில் தான் மக்கள் எல்லாரும் சென்று வந்தோம். உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் கூட 7 கிலோ மீட்டர் ஒற்றையடி பாதையில் தான் சென்றாக வேண்டும். சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுளாகியும் இப்பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் இதர தேர்தல் பொருட்களை அதிகாரிகள், மலைவாழ் மக்களின் உதவியுடன் தலைச்சுமையாக எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. அடர்ந்த காடு ஒற்றையடி பாதை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து செல்லும் அதிகாரிகள் திக்… திக்… என அச்சத்துடன் வந்து செல்வார்கள்.
சாலை வசதியில்லாமல் நாங்கள் படும் சிரமம் என்ன என்பதை 5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்த வரும் அதிகாரிகளுக்கு தெரியும். அன்று ஒரு நாள் மட்டும் வந்து போகும் அதிகாரிகள் அனுதாபத்தை கூறிச் செல்வார்கள் அவ்வளவுதான்.