பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' – பியூஷ் மனுஷ்

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் 11, 2026 அன்று இரண்டரை வயது பட்டியலினக் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் அந்தப் பகுதி காவல்துறை மெத்தனப்போக்கைக் கடைபிடித்ததாகவும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காலம்கடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக கொளத்தூர் மணியும், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அப்போது, “கடந்த டிசம்பர் 11-ம் தேதிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

டிசம்பர் 15-ம் தேதியே உடற்கூறாய்வு அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அப்போதைய ஆய்வாளர் சுமித்ரா, ‘அறிக்கை இன்னும் வரவில்லை’ எனத் தொடர்ந்து பொய் கூறி, 174-வது பிரிவின் கீழ் சந்தேக மரணம் என்ற அளவிலேயே வழக்கை முடக்கியுள்ளார்.

பிப்ரவரி 22, 2026 வரை (சுமார் இரண்டு மாதங்கள்) எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு, ஒரு குழந்தை நல மருத்துவப் பேராசிரியரின் தலையீட்டால்தான் இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றது.

குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் பெரியநாயகம் என்கிற கலைஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை மறைக்க முயன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பியூஷ் மனுஷ் - கொளத்தூர் மணி
பியூஷ் மனுஷ் – கொளத்தூர் மணி

பாதிக்கப்பட்ட குழந்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும், குற்றவாளி பட்டியலினத்தைச் சாராதவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் இந்த வழக்கு கையாளப்பட வேண்டிய சூழலில், அதிகாரிகள் காட்டிய மெத்தனப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்துப் புகார் அளித்தோம். மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற பெரும் திரள் போராட்டத்திற்குப் பின்னரே, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் சுமத்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே.

இந்த வழக்கை விரைவுபடுத்தக் கோரி அழுத்தம் கொடுத்த எனக்கு (பியூஷ் மானுஷ்), பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் சுமித்ரா, சேலம் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரபல ரவுடிகளை வைத்துப் மிரட்டும் நோக்கத்துடன் பேசினார். அதற்கான 3 மணி நேர ஆடியோ ஆதாரங்கள் இருக்கிறது.

குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும், உரிய பிரிவுகளில் உடனடியாக வழக்குப் பதியப்படவில்லை. குற்றத்தைப் பற்றித் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரி குற்றவாளியாகக் கருதப்படுவார்.

சிறுமி உயிரிழந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், அரசு அறிவிக்க வேண்டிய விக்டிம் காம்பன்சேஷன் (Victim Compensation) எனும் இழப்பீட்டுத் தொகை ஒரு ரூபாய் கூட அக்குடும்பத்திற்குப் போய்ச் சேரவில்லை. மரணச் சான்றிதழ் பெறுவதற்கே அக்குடும்பத்தை அலைக்கழித்துள்ளனர்.

பியூஷ் மனுஷ் - கொளத்தூர் மணி
பியூஷ் மனுஷ் – கொளத்தூர் மணி

எனவே, எங்கள் கோரிக்கையாக இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே குற்றங்களை மூடி மறைக்க முயன்ற காவல் ஆய்வாளர் சுமத்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டது என்பது ஒரு தண்டனையல்ல. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இது ஒரு தனிநபரின் குற்றமல்ல, காவல்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்குலைவு.

எனவே, தமிழக முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட்டு நீதி வழங்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால், மக்கள் ஆதரவுடன் நீதிமன்றத்தை நாடவும், சேலத்திலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *