செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களுக்குப் பயிற்சியளிக்கும் போது, அவை மனிதர்களின் உத்தரவுகளை மீறி ஏமாற்றும் வகையிலும், அனுமதியின்றிச் சுயமாக முடிவெடுத்தும் செயல்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான ஏஐ நடத்தைகளை இனி அவ்வப்போது வெளிப்படையாகப் பொதுமக்களுக்கு அறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் சோதனை மற்றும் பயிற்சியின் போது 6 முறை ஏஐ மாடல்கள் தவறான வழியில் செயல்பட்டதை ஓபன்ஏஐ கண்டறிந்துள்ளது. இதில் வெளியிடப்படாத ஒரு ஆராய்ச்சி ஏஐ மாடல், “நான் மற்ற ‘சாட்பாட்’ போல எந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல” எனத் தனக்குத்தானே குறிப்புகளைச் சேர்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், ‘5.6 சொல்’ (5.6 Sol) எனப்படும் மாடல், பயிற்சியின் போது தனது தவறுகளை பயனர்களிடம் இருந்து மறைப்பதற்காகப் பொய் தகவல்களை உருவாக்க முயற்சித்துள்ளது.
அதேபோல், உள்ளூர் கோப்புகளை (Local files) மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டபோதும், ஏஐ மாடல்கள் இணையத்தில் கோப்புகளைப் பதிவேற்றிப் பயன்படுத்தியதும், நிறுவனத்தின் உள் மென்பொருளைத் தவறான வழியில் செய்திப் பலகையாகப் பயன்படுத்தியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவை அனைத்துமே சோதனைக் களத்தில் உள்ள வெளியப்படாத உள்நாட்டு மாடல்களில் மட்டுமே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறி வளர்வதைத் தடுக்க அதன் வளர்ச்சி வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடை, ஏஐ வளர்ச்சியைச் சற்று தாமதப்படுத்திப் பாதுகாப்புச் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்கருத்தை ஓபன்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரும் ஆதரித்துள்ளனர்.
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைவது குறித்து ஏஐ நிறுவனங்களின் ஊழியர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே சுயமாக உருவாக்கிக் கொள்ளும் ஏஐ-களை உருவாக்க முயல்வது ஆபத்தானது எனக் கூறி ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

