நாய் கடியால் குரைத்த சிறுவன்! இருட்டு அறையில் மரணம் வரை சென்று 22 நாள் கழித்து திரும்பிய அதிசயம் | UP boy who barks after dog bite recovers in just 22 days

Spread the love

India

oi-Vishnupriya R

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் நாய் கடித்த பிறகு குரைக்க தொடங்கிய சிறுவன், 22 நாட்களுக்கு பிறகு மீண்டு வந்த அதிசயம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் வசித்து வருபவர் கரண். இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வாரணாசி நகரில் உள்ள தனது மாமா அனிலின் வீட்டிற்குச் சென்றார்.

UP boy

அப்போது அனிலின் 5 வயது குழந்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்ததாம். இதனால் பதறிய அந்த சிறுவன், குழந்தையை பிடித்து இழுக்க முயன்ற போது குழந்தையை அந்த சிறுவன் அடிக்க முயல்கிறார் என நினைத்த அந்த நாய், கரணை கடித்துவிட்டது.

இதை அறிந்த கரண் வீட்டார், அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவனுக்கு டெட்டனஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து தந்தையுடன் கரண் வீடு திரும்பினார். எனினும் கரணுக்கு ரேபீஸ் குறித்த விழிப்புணர்வு இருந்ததால் அந்த ஊசியை போட அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது மருத்துவ ஊழியர் ஒருவரிடம் கரணிடம் விசாரித்த போது டெட்டனஸ் ஊசி போட்டதையும் ரேபீஸ் ஊசி போட வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு அந்த ஊழியர், “நீதான் டெட்டனஸ் ஊசி போட்டுவிட்டாயே, ரேபீஸ் வராது” என தெரிவித்தாராம். இதனால் அதை நம்பி கரண் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அவர் சிறு சிறு வேலைகளையும் செய்து வந்தாராம்.

கடந்த 4 மாதங்களாக அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில், திடீரென மார்ச் 13 ஆம் தேதி மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய கரண் மயக்கம் போட்டு விழுந்தான். உடனடியாக குடும்பத்தினர் மருத்துவர் கொடுத்த மருந்தை கொடுத்ததால் ஏதோ சரியானது போல் இருந்ததாம். இதையடுத்து இரவு தூங்கிவிட்டார்.

அடுத்த நாள் மீண்டும் கரணுக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் நாய் போன்று குரைக்க தொடங்கினார். சரியாக பேசவும் முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட சரியாக குடிக்க முடியவில்லையாம். வாயில் இருந்து எச்சில் வந்து கொண்டே இருந்ததாம்.

இதனால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். கரண், நாய் போன்று குரைக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து சிறுவனை கச்வா பஜாரில் உள்ள ராமர் கோயிலுக்கு கூட்டிச் சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நிலைமை மோசமடைந்தது.

இதையடுத்து கரணை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கெல்லாம் டாக்டர்கள் கைவிரித்துவிட மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதை அடுத்து இரவு நேரம் என்பதால் சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.

இதையடுத்து இரவு முழுவதும் சிறுவன் குரைத்துக் கொண்டே இருந்துள்ளான். மறுநாள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாரணாசிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, “கரணை இருட்டு அறையில் பூட்டி வைங்க, அவர் பிழைப்பது கடினம், அவனிடம் இருந்து விலகி இருங்கள், அவனை யாரும் தொட வேண்டாம், 4 நாட்களில் சிறுவன் இறந்துவிடுவான்” என தெரிவித்தனராம்.

இதை கேட்ட சிறுவனின் பெற்றோருக்கு நெஞ்சே வெடித்தது போல் இருந்தது. அந்த நேரம் கரண் மற்றவர்களை கடிக்கும் நிலைக்கு சென்றுவிட்டான். அதுதான் ரேபீஸ் நோயின் இறுதி கட்டம் என மருத்துவர்கள் நினைத்தனராம்.

இதையடுத்து கரணை சவுரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் டாக்டர்கள் கை விரித்துவிட்டனர். இதன் பின்னர் சொந்தக்காரர்கள் சுமன் என்பவர் முதன்மை சுகாதார நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரிடம் கரணை அழைத்து சென்றனர். அவர் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தினாராம்.

மொத்தம் 22 நாட்களில் 5 தடுப்பூசிகள் போடப்பட்டன. இதையடுத்து கரண் குணமடைந்துவிட்டார். எனினும் ஒரு மாதத்திற்கு பிறகு கரணுக்கு மீண்டும் அறிகுறிகள் வந்தன. டாக்டரிடம் கொண்டு சென்று 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதையடுத்து கரண் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாராம். கரண் எப்படி குணமானார் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், கரணை கடித்தது வளர்ப்பு நாய், அதற்கு ரேபீஸ் ஊசி போட்டிருக்கலாம். அதனால் கரணுக்கு அறிகுறிகள் தெரிய 4 மாதங்கள் ஆனது. மேலும் நாய் கடித்தால் குரைப்பார்கள் என்பதை சிறுவன் கேட்டிருந்ததால் அவராகவே குரைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஆய்வு செய்தால் மட்டுமே இதில் ஒரு முடிவு எட்டும்.

ரேபீஸ் பாதிப்புக்குள்ளாகி டாக்டரால் கைவிடப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த கரண், தற்போது மற்ற சிறுவர்களை போல ஓடியாடி விளையாடுவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டு மருத்துவர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *