தமிழ்நாட்டில் த.வெ.க.வுடன் கூட்டணியா?….. புதுச்சேரி ரங்கசாமியின் பலே வியூகம்! – Kumudam

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸுடன் த.வெ.க. கூட்டணி வைக்க விரும்பியது. அப்போது அந்த முயற்சி கைகூடாததால், தற்போது தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கிளையை ஆரம்பித்து த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க இருக்கிறார் ரங்கசாமி என்பதுதான் புதுச்சேரி அரசியலின் அடடே அப்டேட்டட் நியூஸ். அதிலும் எடுத்த எடுப்பிலேயே, 120 தொகுதிகள், ஆறு மண்டலச் செயலாளர்கள் என தமிழகத்தின் பிரதானக் கட்சியாக வலம்வர ரங்கசாமி திட்டமிட்டிருக்கிறார் என்பதுதான் ஸ்கூப்!

புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர் என்.ரங்கசாமி, தனது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலும் தடம் பதிக்கப்போகிறார் என்று முதன்முதலாக குமுதம் ரிப்போர்ட்டர் தான் சொன்னது. முன்னதாக 06.09.2025 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில், ‘தமிழ்நாடு எனக்கு, புதுச்சேரி உங்களுக்கு.. விஜய் – ரங்கசாமி அடேங்கப்பா அக்ரிமென்ட்’ என்ற தலைப்பிலும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது இவற்றையெல்லாம் நோக்கித்தான் காட்சிகள் நகர்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்து, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான என்.ரங்கசாமிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம். “நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை கேட்டார். அப்போதெல்லாம் ரங்கசாமி விஜய்யிடம், ‘தம்பி உங்களுக்கு வயசு இருக்கு, நல்லா செய்யுங்க. எதற்கும் கவலைப்படக் கூடாது.

நீங்கள் ஒன்று நினைத்து செய்வீர்கள். அது வேறொரு ரூபத்தில் தப்பாக இருக்கும். அப்படி உங்களுக்கு தவறு என்று தெரிந்தால் உடனே அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்பது உள்ளிட்ட தனது அரசியல் அனுபவங்கள் பலவற்றை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். தவெகவின் முதல் மாநாட்டில் விஜய், ரங்கசாமியையும் மனதில் வைத்துதான், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்று அறிவித்தார். அப்போதே ரங்கசாமிதமிழ்நாட்டிலும் கட்சி ஆரம்பித்து த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று விரும்பினார். ஆனாலும், உடனிருந்தவர்கள் எச்சரித்ததால், அவர் அதில் இறங்கவில்லை. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவில் த.வெ.சு.

108 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. விஜய்யின் வெற்றியைப் பார்த்து ரங்கசாமியும் வாழ்த்தினார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. பா.ம.க. போன்ற கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் முக்கியப் புள்ளிகளிடம் பேசி அவர்களுக்கு சில வாக்குறுதிகளையும் அளித்து தங்கள் பக்கம் கொண்டுவரும் அசைன்மென்ட்டை ரங்கசாமி கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தனது கட்சியின் கிளையை ஆரம்பிக்க வேண்டும் என்பது ரங்கசாமியின் நீண்டநாள் கனவு. தற்போது தமிழகத்தில் த.வெ.க. சாதித்துள்ளதால் இங்கு கட்சி ஆரம்பித்து அவர்களோடு கூட்டணி வைக்கலாம் என நினைக்கிறார். த.வெ.சு.வுக்கு தமிழ்நாட்டில் நம்பகமான ஒரு பார்ட்னர் இல்லை என்பதும் அந்த இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்பதும் ரங்கசாமியின் எண்ணம்.

இதற்கேற்ப, வட தமிழகத்தில் உள்ள 120 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸை வலுப்பெற செய்தவற்கான யுக்திகளை ரங்கசாமி தயார் செய்திருக்கிறார். இதற்காக முதலில் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மண்டலச் செயலாளர் என ஆறு மண்டலச் செயலாளர்களை நியமித்து, அதன்பிறகு நம்பகமான ஒருவரை தமிழக தலைமைப் பொறுப்பிற்கு கொண்டுவர வேண்டும் என ரங்கசாமி திட்டமிட்டிருக்கிறார்.

தற்போது ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, சேலம் முன்னாள் எம்.எல்.ஏ. அருள், காங்கிரஸைச் சேர்ந்த நா.சேராமச்சந்திரன், சினிமா பிரபலங்கள் என பலர் வந்து ரங்கசாமியை சந்தித்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல், பா.ம.க.வில் தியாக அடைமொழிகொண்ட ஒருவர் சமீபமாக அமைதி காத்துவருகிறார். அவர் சமீபத்தில் ரங்கசாமியை சந்தித்து விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்த லிஸ்ட்டில், முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் அடக்கம்.

அதேபோல் தமிழக காங்கிரஸில், வட தமிழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர், ‘காங்கிரஸில் வட தமிழக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. அதனால் ரங்கசாமியின் கட்சியில் இணைவோம்’ என ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோக, மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் ரங்கசாமியின் கட்சியில் இணைய ஆர்வமாக இருக்கிறார்கள். முதலில் வருபவர்களுக்கு முக்கிய பதவியை கொடுத்துவிட்டால் அதன்பிறகு வரும் முக்கியமானவர்களுக்கு தகுந்த பதவியை தர முடியாமல் ஆகிவிடும் என்று நினைக்கிறார் ரங்கசாமி. அதனால் முதல் மூன்று மாதங்களுக்குள் யார், யார் வருகிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு தகுந்த முறையில் பதவியைக் கொடுக்கலாம் என்பதுதான் அவரது திட்டமாக இருக்கிறது.

தற்போது வரும் ஆகஸ்ட் 24ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஆரம்பிக்கிறது. அதற்குள்ளாக தமிழகத்தில் மாவட்டவாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாநில நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முடிவுகளை கலந்தாலோசித்து ஒரு நல்ல தேதியில் என்.ஆர்.காங்கிரஸ் கிளையை தமிழகத்தில் ஆரம்பித்துவிடுவார் ரங்கசாமி” என்று சொல்லி முடித்தனர்.

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸின் தமிழகப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் பேசினோம். “கர்மவீரர் காமராஜரின் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்யும்வகையில், தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கிளையை ஆரம்பிப்பது என்பது காலத்தின் கட்டாயம்.  காமராஜரைப்போல் மக்களைநேசிக்கும் தலைவரான ரங்கசாமி தமிழக மக்களுக்காகவும் பாடுபடவிருக்கிறார் என்பது உண்மைதான். இதை எங்கள் தலைவர் முறைப்படி தெரிவிப்பார்” என்றார்.

நல்லது நடந்தால் சரி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *