தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22, 2026 அன்று பதவியேற்றார். அமைச்சர் வன்னிஅரசு அவர்களை சந்தித்து அண்மை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.
“வி.சி.க-வின் 35 ஆண்டுகால பயணத்தில் முதன்முறையாக ஒரு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. வி.சி.க – வின் தொண்டராக, நிர்வாகியாக இந்த அங்கீகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?”
“விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தேர்தலில் அதிகாரம் பகிர்வது, முதலமைச்சர் ஆவது உள்ளிட்ட கனவுகளோடு தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. 90களின் தொடக்கத்தில் வி.சி.க-வின் முழக்கம் என்பது சமூக நீதிக்கான முழக்கமாக இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான கழக முழக்கமாக இருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நீங்கள் சேர்வது என்றால், வாய்க்கரிசி போட்டுவிட்டு வாங்க என்று தான் தலைவர் எங்களை அழைத்தார். எம்.எல்.ஏ, எம்.பி ஆகணும் என்கிற கனவோடு வராதீர்கள் என்றுதான் எங்களை அழைத்தார்.
சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம், கிளர்ச்சி, புரட்சி உருவாக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களுடைய தலைமையில் அணிவகுப்போம் என்கிற அடிப்படையில் தான் இணைந்தோம். 1999 காலகட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு பாதையில் இருந்து விலகி, தேர்தல் பாதைக்கு வந்தோம்.
அதற்கு முன்பாக எழுப்பப்பட்ட முழக்கம் என்பது ‘உங்களில் எவனும் யோக்கியன் இல்லை, எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை‘ என்பது தான். இன்றைக்கு தேர்தலில் ஒரு சீர்திருத்தத்தை, தூய்மையான ஒரு அரசியலை முன் எடுப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.
நாங்கள் கடந்து வந்த பாதை மற்ற கட்சிகளுடன் முற்றிலும் வேறுபட்டது. எங்களுடைய பாதை கரடு முரடான கற்கள், முட்கள் நிறைந்த பாதை. எரிக்கப்பட்ட குடிசைகளில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம். வெட்டப்பட்ட சிந்திய ரத்தத்திலிருந்து கிளம்பி வந்திருக்கிறோம்.
சாதாரணமாக இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரோடு கண்ணீராக வந்து இந்த களத்தில் நின்றிருக்கிறோம். அந்த வலியோடு தான் இப்போதும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.”

“பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, நீண்ட காலத்திற்கு பிறகு அமைச்சர் பதவி பெற்று, தலைவர் உங்களை அமர வைக்கும் பொழுது எப்படி இருந்தது? என்ன நினைத்தீர்கள்?”
“கடந்து வந்த பாதை தான் எனக்கு நினைவில் வந்தது. மக்களை அழைத்து எப்படி இயேசு நாதர் விடியலை காண்பித்தாரோ, அதேபோல எங்கள் தலைவர் இந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து, தியாகத்தோடு, முழுக்க முழுக்க கொள்கையோடு எங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
தேர்தல் பாதையில் நாங்கள் வந்த உடனேயே ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம், எளிய மக்களுக்கும் ஜனநாயகம்’ என்பது தான் எங்களுடைய முழக்கமாக இருந்தது. கடைசி மனிதனுக்கான அதிகாரம் என்பது தற்போது கிடைத்துள்ள அதிகாரம்தான். எங்களுடைய தலைவர் அவர்களின் கால்கள் பயணிக்காத இடமே இல்லை, அவர் சந்திக்காத களமே இல்லை. அப்படி இந்த களத்திலிருந்து இந்த பயணத்திலிருந்து எங்களுடைய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து இங்கே உட்கார வைக்கிறார் என்றால், அந்த இடத்தில் வன்னி அரசு என்பவர் இல்லை, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான் அந்த இடத்தில் இருக்கிறார்.
லட்சக்கணக்கான மக்களின் அடையாளமாக, தமிழ்நாட்டின் உரிமைக்கான அடையாளமாக, தேசிய இனத்தினுடைய அடையாளத்தின் முகமாக, தமிழ் ஈழ முழக்கத்தினுடைய முகமாக, புலம்பெயர் தமிழர் உடைய கோரிக்கையினுடைய முகமாக இந்த அமைச்சர் பதவி இருக்கிறது. வெறும் ஒற்றை முகமாக இல்லாமல், இந்த அமைசர்ருக்கு பின்பு இத்தனை முகங்கள் இருக்கின்றது.”