ஆங்காங்கே நிவினுக்கும், சூரிக்கும் நடக்கும் மோதல்களும் சண்டைகளும் சிறிது விறுவிறுப்பைக் கூட்ட முயன்றாலும், அவற்றிலும் நடக்கும் தத்துவார்த்த வகுப்பு விறுவிறுப்பை எட்டி உதைக்கிறது.
இரண்டாம் பாதியில் மீண்டும் காதல் எனும் மையக்கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. மூன்று காலகட்டங்களில் நடக்கும் நிவினின் காதல் கதைகளும், அவற்றில் நடக்கும் உரையாடல்களும் காதலின் கதகதப்பைச் சிறிதளவு பார்வையாளர்களுக்கும் கடத்துகின்றன.
இவற்றுக்குப் பின்னணி இசையும் கைகொடுத்திருக்கிறது. ஆனால், மீண்டும் முதல் பாதியின் தண்டவாளத்திற்கு மாறும் திரைக்கதை, மீண்டும் தத்துவம், அறிவுரை, தேவையில்லாத ஆக்ஷன் என அயர்ச்சியையே தந்து முடிகிறது.
ஓர் எலியின் உயிரையும், ஒரு சிறுவனின் உயிரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் வசனங்களுக்கான காரணங்களும் ஆழமாகச் சொல்லப்படவில்லை.

காதல் மணமும், சுவாரஸ்யம் தரும் ஒன்லைனும் ரசிக்க வைத்தாலும், தெளிவில்லாத திரைக்கதையும், திகட்ட வைக்கும் வசனங்களும் ஏழு கடல்கள் ஏழு மலைகளை நடந்தே கடந்துவிட்ட அயர்ச்சியைப் பார்வையாளர்களுக்குத் தருகின்றன.