மாணவியிடம் அத்துமீறல்.. சர்ச்சையில் சிக்கிய காங். எம்எல்ஏ.. வெளுத்து வாங்கிய சின்மயி! – Kumudam

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் ஓடும் அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ தவறாக நடந்து கொண்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து ஆய்வின் போது எழுந்த சர்ச்சை

தெலங்கானா அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மகாலட்சுமி’ இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய, இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி பொங்குலூர் பகுதியில் இருந்து அரசுப் பேருந்தில் பயணித்தார்.

அப்போது பேருந்தில் நின்றபடி பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் இத்திட்டம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்தத் திட்டத்தால் ஆண்டிற்குத் தனக்கு ரூ.45,000 வரை சேமிப்பதாக அந்த மாணவி கூறினார். அந்த உரையாடலின் போது, இயங்கிக் கொண்டிருந்த பேருந்தில் எம்.எல்.ஏ அந்த மாணவியின் கையைப் பிடித்தபடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது.

எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி விளக்கம்

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து விளக்கமளித்துள்ள 70 வயதான எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி, “இப்ராஹிம்பட்டினம் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால், திட்டத்தின் பயன்பாட்டை நேரில் அறியவே பேருந்தில் ஏறி ஆய்வு செய்தேன். மாணவிகள் என்னிடம் பேச வந்தபோது, எனது சொந்தக் குழந்தைகளிடம் காட்டுவதைப் போன்ற அன்பான பழகலையே வெளிப்படுத்தினேன். எனது பேச்சை தவறாகச் சித்தரிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார்.

சின்மயி கண்டனம்

இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “காங்கிரஸ் கட்சி தனது ஆண் அரசியல்வாதிகளுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கை வைக்காமல் நடந்து கொள்ளப் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு சாதாரண உரையாடலுக்கு அந்தச் சிறுமியை மீண்டும் மீண்டும் தொட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

அவருக்கு என்ன வயது என்பது முக்கியமில்லை; அந்த நெரிசலான இடத்தில் அந்தச் சிறுமி விலகிச் செல்ல முயன்ற போதும், அவர் மீண்டும் மீண்டும் கையை நீட்டித் தொடுகிறார். அச்சிறுமியைப் பின்னோக்கி இழுக்க முயலும் அவரது தோழியின் கையையும் பிடித்துக் கொள்கிறார். பெண்கள் தேவதைகள் என்றெல்லாம் பேசுபவர்கள், பேத்தி வயதில் உள்ள ஒரு குழந்தையைக் கூடத் தவறாகத் தொடும் வாய்ப்பை விடுவதில்லை. தொடுவதற்கு முன் ‘சம்மதம்’ பெறுவது குறித்த எந்தப் புரிதலும் இவருக்கு இல்லை” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *