பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசியிருந்தார். மிக முக்கியமாக நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் பேசினார்.

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 88,567 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 1,22,092 பேர் தீவிர காயங்களில் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் மூலமான இறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்து கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. முதல்வருடன் லண்டனுக்கு சென்றிருந்தேன். அப்போது நாங்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து விளையாட்டு போட்டியை காண காரில்தான் சென்றோம். இரண்டரை மணி நேர பயணம் அது. டிரைவர் ஒரு நொடி கூட 70 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லவில்லை. அத்தனை கட்டுப்பாடோடு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர். குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக சென்றால், உடனடியாக AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாத இடங்களை மட்டும் சர்வே செய்து கண்டடைந்து அந்த பகுதிகளில் மட்டும் 100 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல அனுமதிக்கிறார்கள்.

முதல்வரிடமும் இந்த சிஸ்டத்தை பற்றி கூறினேன். நாமும் நம்முடைய நெடுஞ்சாலைகளை சர்வே செய்து விபத்து அபாயம் இருக்கும் பகுதிகளில் 60-70 கி.மி வேகத்துக்கு மேல் சென்றால் AI கேமராக்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சாலைகளில் குறிப்பிட்ட தூரங்களில் ஓட்டுநர்களும் பயணிகளும் ஓய்வெடுக்க குழந்தைகள் விளையாட சிறிய மால்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். விபத்தில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் நிறைய உயிரிழப்புகள் நடக்கின்றன. அவற்றை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே விபத்து சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். இத்திட்டங்களுக்கான வேலையை இப்போதிருந்தே தொடங்க வேண்டும். ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க தயாராக இருக்கிறது. முன்பு ஒப்பந்தத்தாரர்கள் கமிஷனுக்கு பயந்து கொண்டிருந்தனர். ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையே அப்போதைய முதல்வரிடம் இதை கவனத்தில் கொண்டு தீர்க்குமாறு கேட்டது. ஆனால், எதுவும் மாறவில்லை. இப்போது இந்த நான்கு மாதத்தில் எல்லாம் மாறிவிட்டது. 5 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை விடுக்க தமிழகத்துக்காக விடுவிக்க நெடுஞ்சாலைத்துறை தயாராக இருக்கிறது’ என்றார்.