Sports
oi-Shyamsundar I
சென்னை: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் தற்போது நாக் அவுட் சுற்றில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்களும், திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன.
ஐந்து முறை உலக சாம்பியனான பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி நார்வே அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கால்பந்து உலகின் ஜாம்பவான் அணி, கடப்பாரை அணி என்றெல்லாம் புகழப்படும் பிரேசில் தற்போது உலகக்கோப்பை தொடரில் இருந்து நாக் அவுட் ஆகி உள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே நார்வே அணி கால் இறுதிக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறை. பிரேசில் போன்ற ஜாம்பவான் அணியை உலகக்கோப்பையிலிருந்து நார்வே வெளியேற்றும் என்று கால்பந்து உலகம் கனவிலும் நினைத்திருக்காது.
இந்த அசாத்திய சாதனையைத் தன் ஒற்றை ஆதிக்கத்தால் சாத்தியமாக்கியுள்ளார் அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட்!

நார்வோ சாதித்தது எப்படி?
போட்டியின் 79-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. அப்போது மாற்று ஆட்டக்காரர் ஆண்ட்ரியாஸ் ஷ்செல்டெரப் கொடுத்த துல்லியமான கிராஸ் பாஸை, ஹாலாண்ட் தனது அசாத்திய உயரத்தைப் பயன்படுத்தி மிக நேர்த்தியான ஹெடராக மாற்றி முதல் கோல் அடித்தார்.
பிரேசில் அணி மீண்டு வர முயன்ற வேளையில், ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஹாலாண்ட் அடித்த இரண்டாவது கோல் பிரேசிலின் உலகக்கோப்பை கனவை முற்றிலுமாகத் தகர்த்தது. கூடுதல் நேரத்தில் பிரேசில் ஒரு பெனால்டி கோல் அடித்தாலும், நார்வேயின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
யார் இந்த எர்லிங் ஹாலாண்ட்?
விளையாட்டு உலகில் பல சாதனைகள் வறுமையிலிருந்தும், கடுமையான பொருளாதாரப் போராட்டங்களிலிருந்தும் முளைப்பது வழக்கம். அதேபோன்ற வறுமையான ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்தான் யார் இந்த எர்லிங் ஹாலாண்ட்! அவர் குடும்பமே ஒரு ஸ்போர்ட்ஸ் குடும்பம்தான்.
ஹாலாண்ட் 2000-ம் ஆண்டில் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஆல்ஃப்-இங்கே ஹாலாண்ட்.. பிரீமியர் லீக்கில் லீட்ஸ் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய முன்னணி கிளப்களுக்காக விளையாடிய புகழ்பெற்ற நார்வே நாட்டு கால்பந்து வீரர் ஆவார். அவரது தாய் கிரி மரிடா பிராட் நார்வே நாட்டின் தேசிய அளவிலான தடகள சாம்பியன் ஆவார். இதனால், ஹாலாண்டிற்குப் பிறப்பிலேயே வலுவான விளையாட்டு மரபணுவும் இவருக்கு உண்டு!
ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக ஹாலாண்ட் உயர்ந்ததற்குப் பின்னால் அவரது அசுர உழைப்பும், அர்ப்பணிப்பும் மட்டுமே காரணமாக இருக்கின்றனபல வாரிசுகள் சாதிக்கத் தவறும் இடத்தில், ஹாலாண்ட் தன்னை ஒரு சுயம்புவாக செதுக்கிக்கொண்டார்.
தன்னை தானே செதுக்கிய ஹாலண்ட்
தனது 5 வயதிலேயே நார்வேயின் பிரைன் கிளப்பில் சேர்ந்த ஹாலாண்ட், வார இறுதி நாட்களில் கூட மணிக்கணக்கில் கால்பந்து விளையாடித் தனது திறனை வளர்த்துக்கொண்டார்.
15 வயது வரை ஹாலாண்ட் மிகவும் ஒல்லியாகவும், குட்டையாகவும் இருந்தார். உடல்ரீதியாகப் பலவீனமாக இருந்ததால் அவரால் பெரிய வீரர்களுடன் மோத முடியவில்லை. ஆனால், முறையான உணவுக்கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலமைப்பை ஒரு அசுர வேக ஸ்ட்ரைக்கராக மாற்றினார். இன்று 6 அடி 4 அங்குல உயரத்துடன் மைதானத்தில் டிஃபெண்டர்களை மிரள வைக்கிறார்.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அவர் தனது தாயாரின் குடும்பப் பெயரான பிராட் என்பதைத் தனது ஜெர்சியில் ‘Braut Haaland’ என்று அச்சிட்டு விளையாடி வருகிறார். தந்தை வழியில் கால்பந்து நுணுக்கங்களையும், தாய் வழியில் அதீத உடல் வலிமையையும் பெற்று, இன்று உலகின் மிக விலையுயர்ந்த ஸ்ட்ரைக்கராக அவர் உருவெடுத்துள்ளார்.
பிரேசிலை வீழ்த்தியதன் மூலம், கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக எர்லிங் ஹாலாண்ட் தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார். நார்வேயின் இந்த வரலாற்றுப் பயணம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணமாகும்.