நெருப்புக்கு பதிலாக.. ரத்தத்தை கக்கும் சீன டிராகன்.. கதறும் சீன மக்கள்.. என்ன தான் நடக்கிறது? | China Stock Market Crash: CSI 300 Falls 20% From June Peak, What are the three Key Reasons

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: உலகின் இரண்டாவது மிக பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீன பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் சீன பங்குச்சந்தை 20% வரை சரிந்துள்ளது. அங்கு இந்தளவுக்கு மார்கெட் தாறுமாறாக சரிய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!

பொதுவாக பங்குச்சந்தையில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் ஓடி போய் வாங்குவார்கள். ஆனால், சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை வீழ்ச்சி, விலைகள் குறைந்துவிட்டன என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கிவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.

China Stock Market Crash

சீன பங்குச்சந்தை

ஒரு பக்கம் செயற்கை நுண்ணறிவு துறை மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் சீனாவில் உள்நாட்டில் நுகர்வோர் செலவுகள் வலுவடையவில்லை. அரசும் இந்த முறை பெரியளவில் சப்போர்ட் செய்யுமா என தெரியாத நிலையில், பங்குச்சந்தை மொத்தமாக படுத்தேவிட்டன.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதியான வியாழக்கிழமை, ஷாங்காய் மற்றும் ஷென்சென் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட 300 முக்கிய நிறுவனங்களை சுட்டிக்காட்டும் CSI 300 குறியீடு (நம்ம ஊர் சென்செக்ஸ், நிஃப்டி மாதிரி) 1.6 சதவீதம் வரை சரிந்தது. இதன் மூலம் ஜூன் மாத உச்சத்திலிருந்து சுமார் 20 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல பங்குச்சந்தை 20 சதவீதம் சரிந்தால்.. அது கரடியின் பிடியில் இருப்பதாக அழைக்கப்படுகிறது. அதாவது Bear மார்கெட் என்பார்கள். இதற்கு வல்லுநர்கள் மூன்று முக்கிய காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

AI பங்குகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் AI துறையை வலுப்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இதனால் தொழில்நுட்ப பங்குகளில் முதலீடுகள் அதிகரித்தன.

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. ஏஐ நிறுவனங்களுக்கு இவ்வளவு வெல்யூவேஷன் சரிதானா, பெரும் தொகையை முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் வேகத்துக்கு ஏற்ப நிறுவனங்களின் லாபம் வளராவிட்டால், பங்குகள் விலை சரியும். இப்போது அதுதான் சீனாவில் நடக்கிறது.

சீன மக்களின் செலவுகள் அதிகரிக்கவில்லை!

அடுத்து சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை.. சீனாவில் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகளை தாண்டியிருந்தாலும், மக்கள் அதிக அளவில் செலவு செய்வதில்லையாம். பொதுவாக பொருளாதார சிக்கல் வரும் என்ற அச்சம் இருந்தால் மக்கள் தங்கள் பணத்தை தேவையில்லாமல் செலவிட மாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கிறது. நுகர்வோர் செலவுகள் அதிகரிக்காவிட்டால்.. சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படலாம். இது இரண்டாவது அடி.

சீனா ஒரு கம்யூனிச நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அந்நாட்டு அரசுக்கு உச்சபட்ச பவர் இருக்கிறது. எனவே, பங்குச்சந்தை இப்படி தடுமாறும்போது அது உதவி திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சீன அரசு பங்குச்சந்தையை நிலைநிறுத்த சில நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அது முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு இல்லை. அரசின் தலையீடு பங்குகளின் விலை மேலும் சரிவதை தடுக்க உதவலாமே தவிர நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தாது.

முதலீடு செய்யலாமா

சரி, சீன பங்குகள் தான் இப்படி சரிகிறதே.. அதில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் வரும். இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “சீன பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளது. இந்த நேரத்தில் சில பங்குகளை வாங்குவது சரியாக இருக்கும் என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், சந்தை சரிந்துவிட்டது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்க கூடாது. நிறுவனங்களின் லாப வளர்ச்சி, நுகர்வோர் தேவை, வர்த்தக சூழல் என எல்லாவற்றையும் நாம் பார்க்க வேண்டும்” என்றார்.

அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. சீன பங்குகள் 20 சதவீதம் சரிந்திருப்பதால் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடக்கூடாது. கொஞ்சம் பொறுமையாக உட்கார்ந்து ஒவ்வொரு நிறுவனத்தையும் தனித்தனியாக அனலைஸ் செய்தே வாங்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *