நேபாள் வெள்ளத்தில் பலியான பெண்.. சடலத்தில் இருந்து நகை திருடிய அதிர்ச்சி சம்பவம்! – Kumudam

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் பாயும் போட்டிகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நுவாகோட், தாடிங்க் மற்றும் ரசுவா ஆகிய மாவட்டங்களில் வீடுகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கைலாய மானசரோவர் யாத்திரை சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீர்மின் திட்டப் பணியாளர்கள் பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மாயமான 500-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாயமானவர்களில் 288 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு குழுக்கள் (37 மற்றும் 49 பேர்) மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் (32 பேர்) அடங்குவர். மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 21 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

உறவினர்களை இழந்து மக்கள் தவித்து வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ள பாதிப்புப் பகுதியில் நீரில் மிதந்து வந்த பெண் ஒருவரின் சடலத்தைக் கரைக்கு இழுத்து வரும் இருவர், அந்த உடலை மீட்காமல் அதிலிருந்த தங்க நகைகளை மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொளி எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் தெரியாதபோதிலும், நேபாள வெள்ளப் பகுதியில் நடைபெற்ற சம்பவமாக இது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. “இறந்த உடலைக் கூட மீட்காமல் நகையை மட்டும் பறித்துச் செல்வது மனிதத்தன்மையற்ற செயல்” என நெட்டிசன்கள் வேதனை தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அந்நாட்டு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *