“நொய்யல் ஆற்றில் நுரை வருவதற்கு சோப்பு, ஷாம்பு தான் காரணம்”- சுற்றுச்சூழல் அமைச்சரின் ‘பலே’ விளக்கம் | Noyyal River Foam Controversy: TVK Minister Rajeev’s Remarks on Soaps and Shampoos Spark Debate

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வருவது குறித்த குற்றச்சாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவும் இந்த நுரைக்கு காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்‌ ராஜீவ் விளக்கம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீருடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. அவிநாசியில் இருந்து மங்கலம் வரை செல்லும் ஆற்றுப் பகுதியில் நுரை பொங்கி வருகிறது.

Noyyal River Foam Controversy TVK Minister Rajeev s Remarks on Soaps and Shampoos Spark Debate

ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி எழுவதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர். இது விவசாயம் மற்றும் நிலத்தடி நீரை பாதிக்கும் என்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட‌ தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது.

அதே வேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் டெக்ஸ்டைல் ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும். விதிகளை முறையாக பின்பற்றாமல் தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.

நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.

தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்தச் சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *