
நோய் தீர்க்கும் கந்த சஷ்டிக் கவசம்!
கவசம் பாடினால் கவலை போகும்!
‘முருகா’ என்று உருகி வழிபடாதவர்கள் மிகக்குறைவுதான். முருக வழிபாட்டில் மிக முக்கியமானது கந்தசஷ்டிக் கவசம்.கவசம் என்பது பாதுகாப்பது. நம்மைப் பாதுகாக்கிற கவசமாக, கேடயமாகத் திகழ்வதால் கந்தனுக்கு வைக்கிற இந்த கோரிக்கை ஸ்துதியை, பாடலை பாராயணம் செய்து வழிபடுகிறோம்.
ஆறுமுகனை வணங்கினால் அனுதினமும் ஏறுமுகம் எனும் வாசகம் இன்றைக்கு பிரபலாகிவிட்டது.
ஆட்டோக்களிலும் டூவீலர்களிலும் இந்த வாசகம் கொண்ட ஸ்டிக்கர்களை அதிகமாகப் பார்க்கமுடிகிறது. மற்ற வழிபாடுகளைப் போல் இல்லாமல் மிக எளிமையாக உள்ளதுதான் முருக வழிபாடு என்பது கூடுதல் சிறப்பு. ‘சஷ்டியை நோக்க சரவணபவனார்’ என்கிற கந்தசஷ்டிக் கவசம் சூலமங்கலம் சகோதரிகளால் பாடப்பட்டு, கிராமத்தின் கடைக்கோடியில் உள்ள பக்தர்களுக்கும் சென்று சேர்ந்தது.
சூலமங்கலம் சகோதரிகள், என் அம்மா வழி உறவினர் என்பது கூடுதல் மகிழ்ச்சிதான் என்றாலும் கந்தசஷ்டிக் கவசம் கேட்கும்போதும் பாராயணம் செய்யும்போதும் வருகிற மனநிறைவுக்கு எல்லையே இல்லை. நவக்கிரகங்களில் ஒரு கிரகமான செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் கிரகத்தால் உண்டாகும் தோஷத்தை, செவ்வாய் தோஷம் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்கிறது ஜோதிட சாஸ்திரம். செவ்வாய் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகத்தான் முருக வழிபாடு செய்யச் சொல்லி, பரிந்துரைக்கிறார்கள் ஜோதிடர்கள்.
திருமணத்தடை நீங்குவதற்கு செவ்வாய்க்கிழமைகளில் முருகன்கோயிலுக்குச் சென்று வழிபடுகிறோம். ‘வாழ்க்கையில் என்ன செய்தாலும் ஸ்பீடு பிரேக்கர்’ மாதிரி தடைகள் வந்துக்கிட்டே இருக்கு; தடைகளை யாரோ தந்துக்கிட்டே இருக்காங்க’ என்று நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கலங்கிக் கொண்டிருப்பவர்கள், முருகப்பெருமானை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்கிறார் கிருபானந்த வாரியார்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த நிறம் சிகப்பு. அதனால்தான் முருகக்கடவுளுக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சார்த்தி வழிபடுகிறோம். நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள், படுத்தபடுக்கையாக இருப்பவர்கள், கந்தசஷ்டிக் கவசத்தை படித்து குமரக்கடவுளை வேண்டிக்கொண்டாலே, ஆரோக்கியம் கூடும்; ஆயுள் பலம் நீடிக்கும் என்று முநீஸ்வர சாஸ்திரிகள் தெரிவிக்கிறார்.
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் என்கிறோம். படைவீடு என்றால், தன் படைகளுடன் ஆள் அம்பு சேனைகளுடன் சூரனை அழிக்கப் புறப்பட்ட முருகப்பெருமான், தங்கியிருந்ததாகச் சொல்கிறது புராணம்.எதிர்களையும் துஷ்டர்களையும் அசுரர்களையும் அழித்ததைத்தான் சூரசம்ஹார நிகழ்வென கொண்டாடுகிறோம். திருவிழாவாக ஆர்ப்பரித்து மகிழ்கிறோம்.
ரணருணசத்ரு என்றொரு வாசகம் உண்டு. ரணம் என்றால் நோய். ருணம் என்றால் கடன். சத்ரு என்றால் எதிரி. இந்த மூன்றையும் அழித்துக்காக்கிற கடவுளான முருகப்பனின் கந்த சஷ்டிக் கவசம் அளப்பரிய சக்தியைக் கொண்டது. இதில் உள்ள ஒவ்வொரு வரியும் நல்ல அதிர்வுகளைக் கொடுக்கக்கூடியவை. சிறுவயதில் பள்ளிக்குச் செல்வதற்குக் கிளம்பும்போது, பூஜையறையில் அமர்ந்து, இந்த சஷ்டிக்கவசத்தை படித்துவிட்டு, பையை மாட்டிக்கொண்டு நடையைக் கட்டும்போது உடலிலும் உள்ளத்திலும் ஒருவித எனர்ஜி கூடியதற்கான காரணம், அப்போது தெரியவில்லை; அறியவில்லை.
முருகன் கோயிலுக்குச் செ ல்லுங்கள். ஆறுபடைவீடுகளுக்கோ அருகில் உள்ள கோயிலுக்கோ, சிவாலயத்தில் உள்ள முருகனை, அம்மன் கோயிலில் சந்நிதிகொண்டிருக்கிற குமரனை தரிசியுங்கள். முக்கியமாக கந்தசஷ்டிக் கவசத்தை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்யுங்கள்.வாய்விட்டு பாராயணம் செய்யுங்கள். பலமும் வளமும் நலமும் பெறலாம் என்பது உறுதி!
எனக்குத் தெரிந்த மருத்துவர் அவர். உடலில் ஏதேனும் மக்கர் என்றால் அவரிடம்தான் செல்வேன். அவருடையை அறையில் திருசெந்தூர் முருகன் சிரித்தபடி வரவேற்பார். அத்துடன் கந்தசஷ்டி கவசம் சன்னமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒருமுறை யதார்த்தமாகக் கேட்டபோது, ‘சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என ஹஸ்கி வாய்ஸில் பாடினார்.
‘இந்தப் பாடலில் ஒவ்வொரு அங்கங்களையும் காத்தருள்வாய் முருகா’ என்று வரும். உடம்புல ஏதேதோ பிரச்னைகள் என்று என்னைத் தேடி வரும் நோயாளிகளாகிய பக்தர்களை, அவர்களின் அங்கங்களை, தேகத்தை சரிசெஞ்சு கொடு முருகா’ என்று வேண்டிக்கொண்டுதான் ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கிறேன்’’ என்றவர், ‘’அவ்வளவு ஏன்… நானும் மனுஷந்தானே… என் உடம்புங்கிற மிஷினும் மக்கர் பண்ணத்தானே செய்யும் சஷ்டிக்கவசத்தை பாடிட்டு, மாத்திரையைப் போட்டுக்கறது என் வழக்கம். மருந்து உடம்பைக் காக்கும். மந்திரம் மனசை பலப்படுத்தும்’’ என்றார் சிரித்தபடி!
செவ்வாய்க்கிழமையில் கந்தசஷ்டி கவசம் படிப்போம். சஷ்டி திதியில் பாராயணம் செய்வோம். கார்த்திகை நட்சத்திர நாளில், பாடித்துதிப்போம். வெள்ளிக்கிழமையில் முருகனைப் பாடி பரவசம் கொள்வோம். அவ்வளவு ஏன்… எந்த நாளிலும் தினந்தோறும் கூட, கந்தசஷ்டிக்கவசம் பாடி முருகனைக் கும்பிடுவோம்! ‘யாமிருக்க பயமேன்’ என்பதுதான் முருகன் சொன்ன நம்பிக்கை வாசகம்!
முருகன் இருக்க பயமேன்!
– வி.ராம்ஜி