படம் OUT…பாட்டு HIT!…‘செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு’.. மனதை மயக்கும் இளையராஜா பாடல்! – Kumudam

Spread the love

 – வி.ராம்ஜி

அந்தக் காலத்திலேயே இரட்டை இயக்குநர்களாக கிருஷ்ணன் பஞ்சு முதலானவர்கள் வலம் வந்தார்கள். அதையடுத்து வந்த இயக்குநர்களில் பாரதி வாசு ஆகியோர் தடம் பதித்தார்கள். பிறகு இரண்டுபேரும் தனித்தனியாக இயக்கினார்கள். நடித்தார்கள். இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிறகு சந்தானபாரதி என்றும் பி.வாசு என்றும் ஆனார்கள். அந்த நண்பர்கள், இயக்குநர் ஸ்ரீதரின் சிஷ்யர்கள். இவர்கள் இயக்கிய முதல் படம்… பன்னீர் புஷ்பங்கள். இந்தப் படத்தை கங்கை அமரன் தயாரித்தார். அடுத்த படமாக ‘மெல்லப்பேசுங்கள்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் தயாரித்தார்.

முதல் படம் குறித்துப் பேச ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இசையையும் பாடலையும் சொல்ல பக்கங்கள் போதாது. இரண்டாவது படமான ‘மெல்லப்பேசுங்கள்’ படத்தின் பாடலைப் பேசுவோம்.

பாரதி வாசு இயக்கிய இந்தப் படம்தான் நடிகர் வசந்த் அறிமுகமான முதல் படம். பிறகு டிவி சீரியல்களிலும் கலக்கினார். படத்தின் நாயகியும் அறிமுகம்தான். கண்ணழகி, இடையழகி, குரலழகி, நடிப்பழகி என்று கொண்டாடப்படுகிற பானுப்ரியாவின் முதல் படம் இதுதான்!

இந்தப் படத்துக்கு இளையராஜா, இசையையும் பாடல்களையும் கொடுக்க வழக்கம்போல் அனைத்தும் ஹிட்டாகின. புலமைப்பித்தன், வைரமுத்து, கங்கை அமரன் பாடல்களை எழுதினார்கள். இதில் புலமைப்பித்தன் எழுதிய பாடல் தனி ரகம்; புது தினுசு. தீபன் சக்கரவர்த்தியும் உமா ரமணனும் பாடிய அந்தப் பாடல், படத்தலைப்பைப்போலவே, நம்மை மெல்லமெல்ல ஏந்தி, எடுத்துக்கொள்ளும். அந்தப் பாடல்தான்… ‘செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு!’

1983ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். டீக்கடையில் டீ குடிக்கிற வழக்கம் என்பது அநேகமாக வந்தது இந்தக் காலகட்டத்தில்தான்! இதற்குக் காரணம்… இளையராஜா! ஏ ஒன் டீக்கடை, ரயில்வே ஒர்க் ஷாப்பின் ஆர்மரிகேட் வாசலுக்கு எதிர்ப்பகுதியில் உண்டு. அங்கே குடித்த தேநீரும் ஏ ஒன். கேட்ட பாடல்களும் ஏ ஒன்!

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடலின் ஆரம்பம், திருப்பள்ளியெழுச்சி ஸ்டைலில் அமைந்திருக்கும். காதலனை பாட்டுப்பாடி காதலி எழுப்புவதாக இந்தப் பாட்டு. உமா ரமணனின் குரலில் எத்தனை குதூகலங்கள் இருந்தாலும் அதற்குள் மெல்லியதான ஓரிழையில் சோகமும் இருக்கும். அவரின் தனித்துவமான குரலுக்கு கேட்டமாத்திரத்திலேயே அடிமையாகிப் போவோம்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்!

என்று புலமைப்பித்தன் ஆரம்ப வரிகளைக் கட்டமைத்திருப்பார். கொஞ்சுவது தித்திப்புதான்/. முத்தமும் தித்திப்புதான். ஆனால், அவற்றையெல்லாம் விட, ‘நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்!’ என்று நண்பர்கள் மனப்பாடம் செய்து, ஸ்கூலுக்கு நடையைக் கட்டுவோம்.அத்தனை தித்திப்பு கொண்ட காலம் அது!

இதையடுத்து தீபன் சக்கரவர்த்தி வருவார். அவரின் குரல், ‘இது எஸ்பிபி இல்லடா, ஜேசுதாஸும் இல்லடா, மலேசியா மாதிரி சுத்தமா இல்லடா. யாருடா இது’ என்று கேட்டுக்கேட்டு பிறகு பெயர் தெரிந்துகொண்டோம். அதன் பிறகு திருச்சி லோகநானின் மைந்தர்கள் அனைவருமே பாடகர்கள். அவர்களில் தீபன் சக்கரவர்த்தியும் ஒருவர் என அறிந்து வியந்தோம்.

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம் என்று கொஞ்சுவார். அவர்கள் கொஞ்சுவதற்காகவே, வானவில்லில் தோரணம், வண்டு இசைக்கும் நாயனம் என்று மெட்டுக்குள் தேன் ஊற்றியிருப்பார் புலமைப்பித்தன்.

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
என்று உமா ரமணன் கல்யாண ஓலை, தங்கத்தேர் ஊர்கோலம் என கனவின் ஏக்கத்தைப் பிரதிபலிப்பார்.

காதல் மணம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின்
வண்ணங்கள்
என்று தீபக்குரலில் இசை ஜொலிக்கும்.  

பாடலில் மிருதங்கத்தை மென்மையாய் சேர்த்திருப்பார். அடுத்து தபேலாவுக்கு அதிக முக்கியம் தந்திருப்பார். அடுத்து வழக்கம்போல் புல்லாங்குழலின் ஓசை ஒவ்வொரு விதமாக ஊடுபயிர் போல் விதைக்கப்பட்டுக்கொண்டே இருப்பார் இளையராஜா. வயலினும் மிருதங்கமும் நடுவே பேசிக்கொள்ளும்.

அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை

கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு என்று பாடி முடிப்பார்கள்.

ஆனால் இளையராஜா ‘சின்னதா ஒரு வார்த்தையையும் பாடிருங்க’ என்று சொல்லியிருப்பார் போல! பாடலின் தொடக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பவனை நாயகி எழுப்பினாள் அல்லவா! அதன் பிறகு தாமரை, தேன்மழை., ஊஞ்சல், கஸ்தூரி மான்குட்டி, தாழம்பூ, தங்கத்தேர் என்றெல்லாம் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். பிறகென்ன… அயர்ச்சியும் களைப்புமாக தூங்கவேண்டியதுதானே… என இசைஞானி சிந்தித்திருக்கிறார். அதனால் பாடலின் நிறைவில்,

ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ

என்று உமா ரமணனும் தீபன் சக்கரவர்த்தியும் பாடி முடிக்க, நாயகனும் நாயகியும் தூங்கிவிடுவார்கள். பாடலைக் கேட்ட நாம் தூக்கத்தைக்கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, இன்னுமொரு முறை கேட்கலாமே என்று, இளையராஜாவின் தாளக்கட்டுக்குள் உருவான, செவ்வந்திப்பூக்களால் செய்த வீட்டுக்குள் உலாவிவிட்டு வருவோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *