நேற்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தார்.
அந்த அறிவிப்பு “விஞ்ஞான ஏமாற்று வேலை’ என்று சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான அதிமுக அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.