‘பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!’ – பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

Spread the love

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், “நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்கு மாதந்தோறும் ரூ 50,000 லஞ்சம் தர வேண்டும்’ என பேரம் பேசி புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பே ரூ. 20,000 லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் பேரம் பேசும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், அடுத்து வெளியான ஒரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ள நிலையில் அங்கு வரும் நபர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் பேசுவது பதிவாகியுள்ளது. அதில், வி.ஏ.ஓ சரவணனிடம், ‘நீங்கள் ரூ. 50,000 கேட்டீர்களாம்’ என்று கூறும் அந்த நபர் ஐந்தாயிரம் தருவதாக கூறுவதும், அதற்கு வி.ஏ.ஓ, ‘பட்டாவிற்கே ஐந்தாயிரம் வாங்குகிறோம். இப்போது, ரூ. 20,000 மாவது கொடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘நாங்கள் ரெகுலராக ஓட்டுவது இல்லை’ என பேசுவதும், இறுதியாக வி.ஏ.ஓ இருபதாயிரம் கேட்பதும் பதிவாகியிருந்தது.

அதேபோல், மற்றொரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு ஒரு மரத்தடியில் கருப்பு சட்டை அணிந்துள்ள ஒரு வாலிபர் வி.ஏ.ஓ சரவணனிடம் பேசி, ‘அடுத்து ஆர்டர் வரும் போது உங்களிடம் சொல்லிவிட்டே செய்கிறேன். பார்த்து பண்ணிக்கலாம்’ என்று கூறி தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வி.ஏ.ஓ-விடம் கொடுப்பதும், அதை அவர் வாங்கி வைத்துக் கொள்வதும் பதிவாகி இருந்தது. இதேபோல், தொலைபேசி உரையாடலில், ‘வண்டி ஓட்டும்போது தகவல் கொடுங்கள். ஜோனல், டி.டி அனைவரும் ரவுண்ட்சிலதான் இரவு பகலாக உள்ளனர். எனக்கு பிரச்னை வந்துவிடும். உங்களை செய்ய வேண்டாம் என்று கூறவில்லை’ என வி.ஏ.ஓ கூற, ‘நான் பர்மிட் போட்டு தான் ஓட்டினேன். இப்பொழுது ஒரு நடை அவசரம் என்பதால்தான்’ என்று பேசினார். அதற்கு வி.ஏ.ஓ, ‘நான் ஒன்னும் பிரச்னை எல்லாம செய்யவில்லை. பார்த்து செய்யுங்கள்’ என்பதும், ‘நீங்கள் 50,000 ரூபாய் கேட்டீர்களாம். அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது’ என்று மணல் வியாபாரி பேசுவதும், ‘மேலே வரை தகவல் சென்று விட்டது. மேலேயும் நான் சொல்லி இருக்கேன். இப்போதைக்கு பார்த்து செஞ்சி விடுங்க. நாம மாதம் என்ன என்பதை ஒன்றாம் தேதிக்கு மேல் பேசிக்கொள்ளலாம்’ என உரையாடல் தொடர்கிறது. இந்த வீடியோ மற்றும் ஆடியோவை மணல் வியாபாரியே ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேசியபடி பணம் வராததால் மணல் கடத்தல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு வி.ஏ.ஓ-வே மற்றொருவர் பெயரில் புகார் அனுப்பியதாகவும், இதனை தெரிந்து கொண்ட மணல் வியாபாரி தற்போது லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வி.ஏ.ஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில், அது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *