
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள இடம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
கட்டட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கம் ஏன் தேர்வு?
புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
திட்டத்துக்கு எதிராக மீனவர்கள்!
இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய கட்டுமானம் காரணமாக தங்களது பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்பது அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான மீனவக் குடியிருப்புகள் உள்ள நிலையில், இப்பகுதியில் மிகப்பெரிய அரசு வளாகம் அமைக்கப்பட்டால் மீன்பிடித் தொழில் மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படலாம் என மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளும் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைந்தால் வாகனப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விஜய் அரசுக்கு புதிய தலைவலி?
ஒருபுறம் புதிய தலைமைச் செயலகத்துக்கான அரசாணை வெளியாகி, திட்டத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் தயாராகி வரும் நிலையில், மறுபுறம் மீனவர்களின் எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் 15-ம் தேதி பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் முடிவு செய்யப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியான நிலையில் திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுக்குமா? அல்லது மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இடத்தை மறுபரிசீலனை செய்யுமா? பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம் விஜய் அரசுக்கு அடுத்த அரசியல் சவாலாக மாறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.