பனியன், டவுசருடன் குறைகளைக் கேட்ட ஆம் ஆத்மி MLA; “பதவியைப் பறிக்கணும்” – டெல்லி முதல்வர் கண்டனம் | Delhi CM demands removal of AAP MLA who listened to public grievances while wearing a vest and shorts

Spread the love

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் ஷா. சமீபத்தில் அனில் ஷா தனது தொகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

அந்த வீடியோவில் ஒரு பனியன் மற்றும் ஷார்ட்ஸ் (கால்சட்டை) அணிந்து கொண்டு மடியில் ஒரு காவி துண்டைபோட்டுக்கொண்ட படி தனது கால்கள் இரண்டையும் தான் இருந்த இருக்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார். அப்படி அமர்ந்து கொண்டே பெண்கள் மற்றும் தொகுதி மக்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களில் கையெழுத்து போட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்.

மாநில அரசு பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தில் அனில் ஷா கையொப்பமிடும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் வரிசையாக வந்து அவரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி சென்றனர்.

அரை குறை ஆடையுடன் நடந்து கொண்ட அனில் ஷாவின் இந்த நடவடிக்கையை மாநில முதல்வர் ரேகா குப்தா கண்டித்துள்ளார். எம்.எல்.ஏ-வின் இச்செயல் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ரேகா அளித்த பேட்டியில், “உங்கள் நடத்தை வெட்கக்கேடானது. பெண்கள் தங்கள் ஆவணங்களில் கையெழுத்து வாங்க வரும்போது நீங்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும். பெண்கள் முன்னிலையில் இது போன்று நடந்து கொண்டதற்காக அனில் ஷாவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.வின் இந்த வகையான அநாகரீகமான நடத்தையைச் சகித்துக்கொள்ள முடியாது. சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆபாசமான சைகைகளைச் செய்தார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்” என்று தெரிவித்தார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது குறித்து அனில் ஷா அளித்த பேட்டியில், “நான் ஏதேனும் தவறான சைகைகள் செய்திருந்தால் அதற்கான வீடியோவை அவர் காட்ட வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அவரிடம் பதில் இல்லை. அதனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்,” என்று அனில் ஷா தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *