கோவை – மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகேயுள்ள பேருந்து நிறுத்தம், போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால், மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதைப் பயன்படுத்தாமல் சாலையோரத்தில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக பல்கலைக்கழக நுழைவாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது பயன்பாட்டில் இல்லை.

பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி குப்பைகள் தேங்கிக் கிடப்பதுடன், புதர்கள் மற்றும் மரக்கிளைகள் அந்தப் பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் பேருந்து நிறுத்தத்தின் உள்ளே இருந்து சாலையில் என்ன நடக்கிறது என்பதையோ, பேருந்து வருவதையோ பயணிகளால் தெளிவாகக் காண முடியவில்லை.