தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து… உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு | World Breastfeeding Week: Breast Milk – Your Baby’s First Vaccine

Spread the love

தாய்ப்பால் சுரக்க… உணவும் ஓய்வும் அவசியம்!

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க விலை உயர்ந்த உணவுகள் தேவையில்லை. ஆரோக்கியமான, சத்தான உணவுப் பழக்கமே போதுமானது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 4 முதல் 6 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். பூண்டு, இஞ்சி, முளைகட்டிய பயிர்கள், கீரை வகைகள், முட்டை, பால், நட்ஸ், இறைச்சி போன்ற புரதம் மற்றும் சத்துகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், காபி, டீ, சாக்லேட் போன்ற கஃபைன் (Caffeine) அதிகம் உள்ள உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மது, ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், உணவு மட்டுமே போதாது. தாய்ப்பால் கொடுக்கும் போது மன அழுத்தம் இல்லாமல், போதுமான ஓய்வுடன், குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவதும் மிகவும் முக்கியம். தாயின் மனநிலையும் தாய்ப்பால் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு பல தாய்மார்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய கவலை இதுதான்.

உலக தாய்ப்பால் வாரம்

உலக தாய்ப்பால் வாரம்

ஆனால்,‌ தாய்ப்பால் சுரக்காமல் போவது மிகவும் அரிதான சூழ்நிலை. குழந்தை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் குடிக்கும்போது, உடலில் இயற்கையாகவே அதற்கேற்ப அதிக பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை அடிக்கடி பால் குடிப்பதே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அதனால், ஆரம்பத்திலேயே “பால் வரவில்லை” என்று பதற்றப்படாமல், பொறுமையுடன் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இருந்தும் போதுமான அளவு சுரக்கவில்லை என்றால், மருத்துவரின் உதவியை அணுக வேண்டும். பிறந்த முதல் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது இயற்கையான ஒன்று. அந்த நாள்களில் சுரக்கும் சீம்பாலே குழந்தைக்குப் போதுமானது.‌ ஆரம்பத்திலேயே பால் இல்லை என்று நினைத்து மாட்டுப்பால் அல்லது (Formula Milk) ஃபார்முலா பாலைத் தொடங்குவது தேவையற்றது. குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கக் குடிக்க, 48 முதல் 72 மணி நேரத்திற்குள் இயற்கையாகவே பால் சுரப்பு அதிகரிக்கும்.

எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது?

பொதுவாக பெரும்பாலான சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதே. ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் மருத்துவரின் ஆலோசனை அவசியம். சிகிச்சை தொடங்காத காசநோய் (Tuberculosis) பாதிப்பு இருந்தாலோ, புற்றுநோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ, அந்த மருந்துகள் தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லும் அபாயம் இருப்பதால், அத்தகைய சூழ்நிலைகளில் மருத்துவரின் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்பட வேண்டும். மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், தாய்ப்பால் கொடுப்பதற்கு பெரும்பாலும் எந்தத் தடையும் இல்லை.

உலக தாய்ப்பால் வாரம்

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் கிடைக்காவிட்டால்…?

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், முதன்மையான தேர்வாக தாய்ப்பால் வங்கியில் (Human Milk Bank) இருந்து பெறப்படும் தானப் பால் பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பால் வங்கியில் சேகரிக்கப்படும் பால், தாயிடம் தொற்று நோய்கள் இல்லையா என்பதை உறுதி செய்த பிறகே பெறப்படும். பின்னர், அந்தப் பால் பாஸ்ச்சரைசேஷன் (Pasteurization) செய்யப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகே குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, குறைமாத குழந்தைகள் (Preterm babies), மிகவும் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் போன்றோருக்கு இந்தத் தானப் பால் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்… தாய்ப்பாலைத் தொடர முடியுமா?

வேலைக்குச் செல்வதால் தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை முன்கூட்டியே சேகரித்து (Breast pump) பாதுகாப்பாகச் சேமித்து, குழந்தைக்குக் கொடுக்கலாம். இதற்காக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, தங்கள் வேலை நேரம் மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ற திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்வது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *