காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நிலவிய இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து சட்டசபையில் அறிவித்தது.
முந்தைய ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதே வேளையில் அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கிடையில், பரந்தூர் அருகே இருக்கும் மதுரமங்கலம் “ஏ’ கிராமத்தில் புதிய சிப்காட் (SIPCOT) மின்னணு மற்றும் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தித் தொழிற்பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் இந்த தொழிற்பூங்கா உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, இங்கு உற்பத்தி மட்டுமல்லாமல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.