பல நாடுகளின் GDP-ஐ ஓவர்டேக் செய்யும் எலான் மஸ்க்! – பின்னால் இருப்பது டெஸ்லாவா, ஸ்பேஸ்எக்ஸ்?

Spread the love

உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டியதில்லை. ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் விரைவில் அடையக்கூடும் என்று தற்போதைய நிதிநிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள் உண்மையானால், ஒரு டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட முதல் மனிதர் என்ற புதிய சாதனையை மஸ்க் தனது பெயரில் சேர்ப்பார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஒரு டிரில்லியன் டாலர் என்பது தற்போதைய மாற்று விகிதத்தில், தோராயமாக 9,49,50,50,00,00,000 ரூபாய். சரி, இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம் என்ன? டெஸ்லாவா? ஸ்பேஸ்எக்ஸா? இரண்டும்தான்! ஆனால், இனி வரப்போகும் வளர்ச்சிக்கு ஸ்பேஸ்எக்ஸ் தான் முக்கிய காரணமாக இருக்கப்போகிறது.

மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பில் பெரும் பகுதி டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மற்றும் பங்கு விருப்பங்களிலிருந்து (stock options) வருகிறது, இதன் மதிப்பு மட்டுமே சுமார் 273 பில்லியன் டாலர்கள். ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (IPO) நடந்தால், அது மட்டுமே மஸ்க்கின் சொத்தில் கூடுதலாக 841 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று CNN தெரிவித்துள்ளது.

இது வங்கிக் கணக்கில் இருக்கும் ரொக்கப் பணம் அல்ல; மாறாக, நிறுவனப் பங்குகள் வடிவில் இருக்கும் காகிதச் சொத்து. இதன் மதிப்பு சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும்.

ஒரு டிரில்லியன் டாலர் என்பது எவ்வளவு பெரிய தொகை? ஒரு தனி நபரின் சொத்து மதிப்பு, பல நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே (GDP) மிஞ்சும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தைவான் (977 பில்லியன் டாலர்), அயர்லாந்து (779 பில்லியன் டாலர்), ஸ்வீடன் (760 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூர் (660 பில்லியன் டாலர்) போன்ற நன்கு வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை விடவும் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும். உலகின் மிகச் சில நாடுகளே இதைவிட அதிகமான ஆண்டுப் பொருளாதார உற்பத்தியைக் கொண்டுள்ளன.

நாடுகளை விடுங்கள், உலகின் நிதி மையமாகவும், வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் தாயகமாகவும் விளங்கும் மன்ஹாட்டனின் ஆண்டுப் பொருளாதார உற்பத்தியையே மஸ்க்கின் சொத்து மதிப்பு முந்திவிடும். ஃபெடரல் ரிசர்வ் தரவுகளின்படி, 2024-ல் மன்ஹாட்டனின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் முக்கிய மையமுமான ஹூஸ்டனில் உள்ள மொத்த வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களின் ஒருங்கிணைந்த மதிப்பான 879 பில்லியன் டாலர்களை விடவும் இது அதிகம்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

தொழில்நுட்ப உலகில் இருக்கும் மற்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும்போதுதான் மஸ்க்கின் வளர்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது தெரிகிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் மற்றும் கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய உலகின் பெரும் பணக்காரர்கள் பலரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.09 டிரில்லியன் டாலர்கள். அதாவது, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பலரின் மொத்த சொத்து மதிப்பிற்கு இணையான சொத்து ஒருவரிடம் மட்டுமே இருக்கப்போகிறது!

இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, உலகின் மிகவும் மதிப்புமிக்க 50 விளையாட்டு அணிகளின் மொத்த மதிப்பு சுமார் 353 பில்லியன் டாலர்கள்தான். இது மஸ்க்கின் கணிக்கப்பட்ட சொத்தில் மூன்றில் ஒரு பங்கை விடக் குறைவு. இந்தச் செல்வத்தைக் கொண்டு, உலகின் ஏறக்குறைய அனைத்து முக்கிய தொழில்முறை விளையாட்டு அணிகளையும் அவரால் எளிதாக வாங்கிவிட முடியும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *