பழனி: ‘தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.க-வுக்கு ஆதரவு’ எஸ்.பி. வேலுமணி பேட்டி | Palani: Support for TVK is solely to eliminate DMK – S.P. Velumani’s interview.

Spread the love

பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் அவர்களின் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.கவின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி, “கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் எங்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்திருந்தார். ஆனால், நானும் அண்ணன் நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் இணைந்து, தலைமை அறிவித்த புதிய ஏற்க முடியாது. நாங்கள் சாதாரணத் தொண்டர்களாகவே தொடர்கிறோம் என ஏற்கனவே தெளிவாகக் கடிதம் கொடுத்துவிட்டோம்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு அண்ணன் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஆதரவு அளித்தோம். பழைய பொறுப்புகள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியின் பேரிலேயே இணைந்து பணியாற்றினோம். ஆனால், சொன்ன வார்த்தை காப்பாற்றப்படவில்லை.

​நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், முடிவுகளை எடுக்கக் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், தோல்விகளை ஆராயாமல் தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

ஜெயலலிதாவின் வழியில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால், பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும். சின்னம்மா சசிகலா அவர்கள், டி.டி.வி. தினகரன் அவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

​அ.தி.மு.க என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிக் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி. ஆனால், இன்றைக்கு நமது கட்சி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

த.வெ.க ஆளுங்கட்சியாகவும், தி.மு.க எதிர்க்கட்சியாகவும் இருக்கும் சூழலில், அ.தி.மு.க 3-வது இடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *