துணை நின்ற அதிகாரிகள் யார்?
அதேவேளையில், இந்த மரணத்தை மட்டும் முன்னிறுத்தி பழனி கோயில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடவும் கூடாது.
கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கைமாறியது?
அதற்குத் துணை நின்ற அதிகாரிகள் யார்?
பத்திரப்பதிவு நடைமுறையில் விதிமீறல்கள் எவ்வாறு நடைபெற்றன?
இதன் பின்னணியில் அதிகார மையங்களின் தலையீடு இருந்ததா?
ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணத்தின் பின்னால் இருந்த முழு அதிகாரச் சங்கிலியையும் விசாரணை சென்றடைய வேண்டும்.
சிறைக் காவலிலிருந்த ஒருவரின் உயிரிழப்பைச் சுற்றி எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோயில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பைத் தொடாமல் இருப்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே தமிழக அரசு, அன்வர்தீன் மரணம் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

உண்மையை வெளிக்கொணர வேண்டும்
சிறை மருத்துவப் பதிவுகள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவத் தகவல்களையும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.
பழனி கோயில் நில முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
அரசியல் அல்லது அதிகாரப் பின்னணி எதுவாக இருந்தாலும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் சொத்து என்பது தனிநபர்களின் கொள்ளைப் பொருள் அல்ல. அது மக்களின் நம்பிக்கையால் ஒப்படைக்கப்பட்ட பொதுச் சொத்து.
அந்தச் சொத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும், சிறைக் காவலில் நிகழ்ந்துள்ள மரணத்தையும் தனித்தனி சம்பவங்களாகப் பார்க்காமல், இரண்டின் பின்னணியிலும் உள்ள உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.