“பழிக்கு பழி.. ரத்தத்திற்கு ரத்தம்” டிரம்ப்பை கொல்லணும்.! ஈரானில் இருந்து வந்த குரல்.. பதற்றம் | Kill Trump’ Chants Echo at Iran Supreme Leader Ali Khamenei Funeral Amid Rising US Tensions

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்ல வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளது. அமெரிக்கா ஈரான் போர் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக தாமதமான இந்த இறுதிச் சடங்கில்.. ஈரானின் அரசியல் மற்றும் ராணுவ உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்.. ஆயிரக்கணக்கான மக்கள் இரவு முதலே திரண்டனர். ஈரான் தேசிய கொடிகள், பழிவாங்கலைக் குறிக்கும் சிவப்பு கொடிகள் மற்றும் கமேனியின் போட்டோக்களை ஏந்தியிருந்த மக்கள் அமெரிக்காவுக்கு எதிரான புழக்கங்களை எழுப்பினர்.

Kill Trump

டிரம்ப்பை கொல்லணும்

“அமெரிக்காவுக்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” உள்ளிட்ட கோஷங்களை முழக்கமிட்டனர். மேலும், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை கொல்ல வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பில் போர்ட், சுவரொட்டிகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் முகமது ரசூலி, “கமேனியின் ரத்தத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஆவேசம்

அவர் மேலும், “உலகிலேயே மிக மோசமான மனிதன் இன்னும் உயிருடன் இருப்பது ஏன்? எங்கள் தலைவரைக் கொன்றவரை நாம் ஏன் கொல்லக்கூடாது? அதை செய்யாவிட்டால் அது எங்களுக்கு அவமானம்” என்றும் ஆவேசமாக கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்ற 29 வயதான கோலாம் ரேசா சபூனி, “எங்கள் தலைவரை கொன்றுவிட்டார்கள். அதற்கு பழிவாங்க டிரம்பை கொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.

ஈரான் தலைவர்கள்

இந்த நிகழ்ச்சியில் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்கா தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் மொஜ்தபா கமேனியின் சகோதரர்கள், புரட்சிகர காவல் படையின் தலைவர் அகமது வாஹிதி, அதிபர் மசூத் பெசெஷ்கியான், சபாநாயகர் முகமது பகர் காலிபாஃப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

போர் முடிந்திருந்தாலும் இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்தச் சூழலில் உயர்மட்ட தலைவர்கள் பொதுவெளியில் ஒன்றாகத் தோன்றியது, ஈரான் அரசின் ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. 97 வயதான ஷியா மதகுரு ஆயத்துல்லா ஜாஃபர் சோபானி இறுதித் தொழுகையை நடத்தினார். கமேனியுடன், அவரது குடும்ப உறுப்பினர்களான மருமகள் ஜஹ்ரா ஹடாட் அடெல் மற்றும் 14 மாத பேத்தி ஜஹ்ரா முகமதி கோல்பய்கானி ஆகியோரின் உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிச் சடங்கு

கமேனியின் உடல் தெஹ்ரானில் இருந்து ஈரானின் பல நகரங்கள் மற்றும் அண்டை நாடான ஈராக் வழியாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இறுதியாக அவரது சொந்த ஊரான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரேசா தர்காவில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இப்போது அமெரிக்கா ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் இருந்தாலும் கூட நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதியாகவில்லை. இதனால் இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அதன் பக்கமே திரும்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *