நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் வெடித்தன.
அதிமுக உட்கட்சி பூசல்
இதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அதிருப்தி அணியுமாக அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. இந்தத் தலைமைப் போட்டியால் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் பெரும் குழப்பமும், தொண்டர்களிடையே அதிர்ச்சியும் நீடித்து வந்தது.
இணைந்த வேலுமணி தரப்பு
பிறகு கட்சிக்குள் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைக்கும் விதமாக, நேற்று முன்தினம் (27-05-2026) முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தையின் முடிவில், கட்சியின் எதிர்கால நலன் கருதி இறுதியாகச் சுமுகமான சமாதானம் எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு அணியினரும் இணைந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்துடன்கூடிய கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
எனினும் இதில் சி.வி சண்முகமும், விஜயபாஸ்கரும் கலந்து கொள்ளவில்லை.