International
oi-Halley Karthik
ஜகார்த்தா: இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, அதிநவீன ‘பிரமோஸ்’ சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவிடமிருந்து இந்தோனேசியா பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த வர்த்தகத்தை சீனா உற்றுநோக்கி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியாவுக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணத்தில்தான் ஆயுத விற்பனை உடன்படிக்கை கையழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா இந்தோனேசியாவுக்கு இரண்டு பேட்டரி பிரமோஸ் ஏவுகணைகளை வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹1,670 கோடி
இந்தோனேசியா தனது கடலோரப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பிரம்மோஸ் தவிர, வானிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ‘அஸ்த்ரா’ ஏவுகணைகளையும் இந்தியாவிடமிருந்து வாங்க இந்தோனேசியா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் வெறும் ஆயுத விற்பனை மட்டுமல்ல, இது பிராந்திய அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கும் மூன்றாவது நாடாக இந்தோனேசியா மாறியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்குகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தோனேசியா தனது தற்காப்புத் திறனை மேம்படுத்த இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.
அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரு பெரும் வல்லரசுகளில் எதையும் சாராமல், இந்தியா போன்ற ஒரு ‘நடுத்தர வல்லரசுடன்’ பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதன் மூலம் இந்தோனேசியா தனது வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைப் பேணுகிறது.
இதர முக்கிய ஒப்பந்தங்கள்
பாதுகாப்புத் துறை மட்டுமின்றி, கடல்சார் ஒத்துழைப்புக்காக இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இது மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மிக நெருக்கமான முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். மேலும், அரிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்தும் 12-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதோடு, பிராந்திய அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.