பாகிஸ்தானில் பயங்கரம்..குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு! 3 ராணுவ வீரர்கள் பலி..பரபர கராச்சி | Karachi Blast and Gunfire Kill Three Pakistan Rangers, Security Intensified

Spread the love

International

oi-Rajkumar R

கராச்சி: பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இன்று (சனிக்கிழமை) வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரேஞ்சர் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கராச்சி நகரின் மோசாமியாத் சவுரங்கி பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன.

வெடிகுண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன், ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அதன் பின்னர் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

Karachi blast Pakistan

பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரேஞ்சர் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில், தாக்குதலில் காயமடைந்த 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவசரகால உதவி சேவையை வழங்கும் எதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ், காவல்துறை கமாண்டோ பிரிவினர் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் இன்னும் அந்தப் பகுதியில் பதுங்கியிருக்கிறார்களா? அல்லது தப்பிச் சென்றுவிட்டார்களா? என்பது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா கேட்டறிந்ததோடு, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெடிகுண்டு சத்தம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக வந்துள்ள தகவலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, என்ன நடந்தது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மக்களை குறிவைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலா? அல்லது பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கராச்சி நகரில் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு நிலைமை மேம்பட்டிருந்தாலும், அவ்வப்போது பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஆயுதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராணுவம், காவல்துறை மற்றும் ரேஞ்சர் படையினரை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், கராச்சியில் நிகழ்ந்துள்ள இந்த வெடிகுண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் மீண்டும் பாதுகாப்பு குறித்து கவலைகளை அதிகரித்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில், , தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பான தகவல்கள் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *