International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு நேற்று இரவு 5 பணியாளர்களுடன் சரக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. அரபிக்கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்தில் வழிகாட்டும் அமைப்பான ‘நேவிகேஷனல் சிஸ்டம்’மில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்த விமானம் திடீரென்று மாயமானது. அந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த கே2 ஏர்வேஸ் விமான நிறுவனத்தால் போயிங் 737 சரக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த சரக்கு விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் இருந்து நேற்று இரவு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர். இந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 9.30 மணியளவில் விமானத்திற்கு வழிகாட்டும் ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டது.
இதுபற்றி உடனடியாக கராச்சியில் உள்ள விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தேவையான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்த விமானம் பாகிஸ்தானை நெருங்கி கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஓர்மாரா என்ற பகுதியில் உள்ள அரபிக்கடலின் மேல்புறம் விமானம் பறந்தது.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்பை இழந்தது. இந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்தவுடன் பாகிஸ்தான் விமான ஆணையம் உள்பட பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் சரக்கு விமானத்தை தேடும் பணியை தொடங்கி உள்ளனர். அரபிக்கடல் பகுதியில் இந்த பணி நடந்து வருகிறது. இந்த விமானத்தின் நிலை என்ன? விமானத்தில் பயணித்த 5 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.