பாசனக் கால்வாய்; மேட்டூர் நீர் மின் நிலையத் திட்டம் | மேட்டூர் அணை ஓசை 42 | history anai osai mettur dam construction series 42

Spread the love

மேட்டூர் அணை உலகின் மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்த அணை மொத்தம் 176 அடி உயரம் கொண்டது. மேலும் அணையில் 93,500 கன அடி நீர் சேமித்து வைக்க இயலும். இந்த சேமிப்பு, நீர்ப்பாசனத்தை முதன்மையான நோக்கம் எனக்கருதி செயல்படும். அதேசமயம், நீர்ப்பாசனத்திற்கென திறந்து விடப்படும் நீர் மூலமாக, மின்சார உற்பத்தியை ஏற்படுத்தி அதன் மூலம் பலனளிக்கக் கூடிய திட்டமாகும்.

நீர் மின் நிலையம்

நீர் மின் நிலையம்

அணை கட்டும்போது, 8.5 அடி விட்டம் கொண்ட 4 குழாய்கள் அணை கட்டமைப்பின் உள்ளே பொருத்தப்பட்டு தேவையான வால்வுகள், கதவுகள், ஸ்கிரீன் மற்றும் இதர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த குழாய்களின் பயன்பாடு என்பது கட்டுமான காலத்தில் நீர்த்தேக்கத்தின் பின் பகுதியில் இருந்து உபரியாக வரும் நீர் வழிந்து ஓடவும், அணை கட்டுமானம் முடிந்த பிறகு மின் உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு மட்டும் 10,80,000 ரூபாய் மொத்தமாக செலவானது.

பொருத்தப்பட்ட ஒவ்வொரு குழாய் வழியாகவும் 1250 கன அடி தண்ணீர், மின்சார உற்பத்திக்கான வெளியேறும் அமைப்பு கொண்டது. பாசன வசதிக்காக தண்ணீர் மூடப்படும் காலங்களில் இந்த 4 குழாய்கள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி, மின்சார உற்பத்தி நடைபெறும் வகையில் இதற்கான பயிர் பருவத்தை முடிவெடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

19000 HP மின்சார உற்பத்தி இங்கு சாத்தியமாயிற்று! இங்கு மின் நிலையம் 317 அடி நீளம், 46 அடி அகலமும் கொண்ட கட்டிடத்தில் இயங்கியது. வெளிப்புறத்தில் அமையும் மின்மாற்றி, (Transformer) பைக்காரா நிலையத்தில் உள்ளது போலவே அமைக்கப்பட்டது. மின்சாரம் ஸ்டீல் டவர் மூலம் மேட்டூர் – மெட்ராஸ் மின் பரிமாற்ற அமைப்புடன் இணைக்கப்பட்டது. பைக்காரா அமைப்புடன் இணைந்த இரட்டை பகிர்மானம், மேட்டூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே இணையாக அமைக்கப்பட்டு அவை திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதற்காக ஈரோட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மின் திட்டம் குறித்து, மெட்ராஸ் மாகாணம் முழுவதும், இதன் பரிமாற்ற அமைப்புகள் குறித்த பல்வேறு அம்சங்களை பற்றி பல தரவுகள் உள்ளன.

ஆனால், நாம் மேட்டூர் அணை குறித்த விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அது குறித்து அவற்றை இந்நூலில் முழுமையாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டதால், மின் திட்ட விவரங்களில் மிகவும் முக்கிய தகவல்கள் மட்டுமே இங்கு பகிரப்பட்டுள்ளன.

காவேரி கிராஸ் பகுதியில் கால்வாய்

காவேரி கிராஸ் பகுதியில் கால்வாய்

மேலும், மெட்ராஸ் மின் கட்டமைப்பு கடந்த பல தசாப்தங்களில் பல்வேறு மாற்றங்களை, கூடுதல் இணைப்புகள் (UPDATE) போன்றவற்றை சந்தித்ததால், 1936 -ல் இது குறித்த தகவல்கள், இந்த மின் திட்டத்தை பொறுத்தவரை இப்போது சில பொருத்தமற்றதாகவும், போதுமானதாக இல்லாமலும் அமையக்கூடும்.

இந்தத் திட்டத்தால் பலன் அடைந்த மாவட்டங்கள் வட மற்றும் தென் ஆற்காடு, சித்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், செங்கல்பட்டு மற்றும் மெட்ராஸ். இந்த மின் திட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களுக்கு பம்பு மோட்டார் இயங்க மின் இணைப்பு, நிலத்தடி நீர் இறைக்க இணைப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதின் உறுதித் தன்மையால் பல்வேறு வகையான சிறப்பு தொழிற்சாலைகள் தொடங்க திட்டங்கள் தீட்டப்பட்டது.

இந்த மேட்டூர் நீர் மின் திட்டம் பல தொழில் முனைவோர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியிலும் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இந்த மின் திட்டத்தின் இயந்திரங்கள் மற்றும் பகிர்மான கட்டமைப்பு குறித்த வேலைகள் 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முழுமையடைந்து ஜூலை 1935 க்குள் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின் பகிர்மான கட்டமைப்பில் பயனுறும் சில உதிரி பாகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பயன்படுத்தத்தக்க உபகரணங்கள் மேட்டூர் பணிமனையில் தயாரிக்கப்பட்டது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு!

இந்த அத்தியாயம் மிகுந்த முக்கியமானது.

திட்ட மதிப்பீட்டில் தேவையான நிலம் கையகப்படுத்தி அதன் அளவு மதிப்பிடப்பட்டு மக்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, நீர்த்தேக்கத்தின் நீர் பரப்பின் எல்லை நிர்ணயம், திட்டத்தின் ஆரம்பத் திட்டமிடுதலின் போதே மேற்கொள்ளப்பட்டது.

மைசூர் – மெட்ராஸ் நடுவர் மன்ற வழக்கின் விளைவாக, நீர்த்தேக்கத்தில் அதிக கொள்ளளவு அனுமதித்ததன் விளைவாகவும், 1924 -ல் ஏற்பட்ட அசாதாரண வெள்ளம் காரணமாக, அணை அமைய வேண்டிய இடத்திலிருந்து வேறு இடத்தை தேர்வு செய்ததன் விளைவாகவும், + 785 அடி MSL என்ற அளவில் இருந்து + 790 அடி MSL என்ற அளவு குறிக்கப்பட்டது.

இந்த நீர்மட்ட உயர்வு ஏற்பட்ட காரணத்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் போது நீரில் மூழ்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதியின் வரம்புகள் மற்றும் கையகப்படுத்தப்பட வேண்டிய கூடுதல் நிலங்களை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவையும் எழுந்தது.

பாசனக் கால்வாய் | மேட்டூர் அணை ஓசை 42

பாசனக் கால்வாய் | மேட்டூர் அணை ஓசை 42

முழு நீர்த்தேக்க மட்டத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்காக ஒரு உதவி பொறியாளர் நான்கு சர்வேயர்கள் மற்றும் 14 ‘லஸ்கர்ஸ்’ எனப்படும் உதவியாளர்கள் கொண்ட சிறப்பு உட்பிரிவு, எட்டு மாத காலத்திற்கு அரசால் அனுமதிக்கப்பட்டது.

மேலும், இதே காலத்தில் உதவி பொறியாளருக்கு உதவ மூன்று பியூன்கள் மற்றும் ஒரு கிளார்க் ஆகியோரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த முழு நீர்த்தேக்கத்தின் மட்டத்தை வரையறுக்கும் பணி மிக முக்கியமானதாக கருதப்பட்டதால், இரண்டு சர்வேயர்களுக்கு பதிலாக இரண்டு சூப்பர்வைசர்கள் நியமிக்கப்பட்டனர். தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படியே ஆட்கள் பணியில் சேர்ந்தனர்.

உதவிப் பொறியாளர் 1927 -ம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி பொறுப்பேற்ற போது, துணைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இரண்டு சர்வேயர்களில் ஒருவர் பிப்ரவரி மாதம் மத்தியிலும், மற்றொருவர் ஏப்ரல் மாதத்திலும் வேலையில் இணைந்தனர். ஒரு கண்காணிப்பாளர் ஜூன் 8-ம் தேதி 1927 -ம் ஆண்டில் மற்றொருவர் அதே ஆண்டில் ஆகஸ்ட் 10 -ம் தேதியும் அணியில் சேர்ந்தனர்.

இந்த தாமதம் காரணமாக இந்த உட்பிரிவு மேலும் 6 மாத கால நீட்டிப்புக்கு அரசு அனுமதித்தது. அதாவது இதன் ஆயுள் ஏப்ரல் 2 -ம் தேதி, 1928 வரை என்று நிர்ணயித்த போதும், முழு வெளி வேலைகளும் 1927 டிசம்பர் 21 -ம் தேதி முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கண்காணிப்பாளரும் இரண்டு சர்வேயர்களும் இந்த வேலை முடிந்த அன்றே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அலுவலக வேலை மற்றும் நீர் பரவி நிற்கும் வரைபட பகுதி போன்ற வேலைகள் முடிவடைந்து, 1928 ஜனவரி 26 -ம் தேதி அன்று அந்த உட்பிரிவு கலைக்கப்பட்டது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த பணி நிறைவடைந்து விட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பணியாளர்களின் திறனை இது எடுத்துக் காட்டுகிறது.

திட்ட தலைமை பணிகளின் விரிவான கணக்கெடுப்பு மற்றும் வடிவமைப்பு இந்திய அரசாங்க “சர்வே” குழுவினரால் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டது. இவர்கள் குறித்த அளவுகள் “கிரானைட்” கற்களில் பதிக்கப்பட்டு அவை கான்கிரீட் மூலம் நிலங்களில் பதிக்கப்பட்டது.

மேல்மட்ட மதகுகள்

மேல்மட்ட மதகுகள்

இந்த மதிப்புமிக்க வேலைகளுக்கு முன்னதாக பல வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக திட்ட அறிக்கை தயார் செய்த “கர்னல் எல்லீஸ்’ அவர்களின் தலைமையிலான குழுவின் அளவுகளுக்கும், புதிய குழுவின் அறிக்கைக்கும் சிறிய வேறுபாடு தெரிந்தது. இரண்டும் ஒத்துப் போகவில்லை. அதாவது அளவில் வேறுபாடு தெரிந்தது (MIS MATCHING). இரண்டு குழுக்களின் தரவும் MSL என்ற MEAN SEA LEVEL, அதாவது கடல் மட்ட அளவை அடிப்படையாகக் கொண்டது.

மேட்டூருக்கு அருகில் உள்ள G.T.S எனப்படும் குறியீடு ஈரோடு ரயில் நிலையம் ஆகும். இது ஏற்கனவே குறிக்கப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ இடமாகும். அங்கிருந்து அளவுகளை மேற்கண்ட இரு குழுக்கள் எடுத்த அளவுகளோடு ஒப்பிட்டு பார்த்து எது நம்பகத்தன்மை அதிகமாக பொருந்துகிறது என்று கண்டறிவது விரும்பத்தக்கதாக கருதப்பட்டது. எனவே எல்லை நிர்ணயம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *