பாஜக எதிர்ப்பை திமுக மாற்றி கொண்டால்.. விபரீதம் வேறு மாதிரி இருக்கும்.. கார்த்தி சிதம்பரம் வார்னிங்! | DMK: Congress MP Karti Chidambaram Cautions DMK of Severe Political Fallout If Anti-BJP Stance Changes

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

திருப்பத்தூர்: பாஜக எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால், திமுகவுக்கு அடுத்த தேர்தலில் மிகப்பெரிய விபரீதம் நடக்கும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டதாக கூறிய கார்த்தி சிதம்பரம், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்தது. அப்போதே திமுக தரப்பு பாஜகவுடன் பேசத் தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

DMK

இதனால் தவெக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைவருமே திமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக மீண்டும் தேர்தலுக்கு முன் எடுத்த நிலைப்பாட்டிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே காங்கிரஸ் அருகில் இருந்த இருக்கைகளை திமுக மாற்றி இருக்கிறது.

இந்த நிலையில் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் அரசியல் முழுக்க முழுக்க இந்தி பேசுகின்ற மாநிலங்களை அடிப்படையாக கொண்டே நடக்கும். தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் தொகையை குறைத்துள்ளோம். அதிகமான வரி கட்டுகிறோம். ஆனாலும் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்.

இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மகளிருக்கான இடஒதுக்கீடு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். இருக்கும் 543 தொகுதிகளிலேயே 181 தொகுதிகளை மகளிருக்கு கொடுக்கலாம். இந்த நிலைப்பாட்டில் தான் திமுக கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இருந்தது. இந்த முறை என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பாஜகவிடம் இருந்து திமுகவுக்கு அழுத்தம் வருவதாக சொல்லப்படுகிறது. என்னுடைய புரிதல் என்னவென்றால், திமுக உடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று திமுகவுக்கு ஆசை காட்டுகிறார்கள். 2029லேயே தேர்தல் வந்துவிடும். 5 ஆண்டுகள் வரை நீங்கள் காத்திருக்க தேவையில்லை என்று பேசுகிறார்கள்.

ஒருவேளை திமுக பாஜக காட்டும் பாதையில் சென்றால், இந்த தேர்தலில் வரும் முடிவுகளை விட இன்னும் மோசமான முடிவுகள் தான் கிடைக்கும். தமிழ்நாட்டில் தவெக கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக மட்டும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், விபரீதம் வேறு மாதிரி தேர்தலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *