பாஜக: 10 ஆண்டுகளில் 5-வது அமைச்சர்; கல்வித் துறை கண்ட மாற்றங்களும் திருப்பங்களும்! | ஓர் பார்வை

Spread the love

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்வித் துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் ‘மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்’ (MHRD) என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பின்னர், ஜூலை 29, 2020 அன்று மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த அமைச்சகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘கல்வி அமைச்சகம்’ என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் நாட்டின் கல்வித் துறையை வழிநடத்த நான்கு முக்கியத் தலைவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி (மே 26, 2014 – ஜூலை 5, 2016)

2014-ல் மோடி தலைமையிலான அரசு அமைந்தபோது மனிதவள மேம்பாட்டு அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய நான்கு ஆண்டு இளங்கலை திட்டத்தை (FYUP) ரத்து செய்தது இவரது பதவிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகும். உயர்கல்வி நிறுவன தரவரிசைக்கான ‘என்.ஐ.ஆர்.எஃப்’ (NIRF) முறையை 2015-ல் அறிமுகப்படுத்தினார்.

வெளிநாட்டு பேராசிரியர்களை இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரவழைக்கும் ‘ஜியான்’ (GIAN) திட்டம் மற்றும் மாணவிகளின் பொறியியல் கல்வியை ஊக்குவிக்கும் ‘உடான்’, ‘பிரகதி’ திட்டங்களைச் செயல்படுத்தினார். 2016 அமைச்சரவை மாற்றத்தின் போது இவர் ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டார்.

பிரகாஷ் ஜவடேகர் (ஜூலை 5, 2016 – மே 30, 2019)

ஸ்மிருதி இரானியைத் தொடர்ந்து பொறுப்பேற்ற பிரகாஷ் ஜவடேகர், உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளுக்காக ‘உயர்கல்வி நிதி முகமையை’ (HEFA) உருவாக்கினார். கஸ்தூரி ரங்கன் குழு மூலம் புதிய கல்விக் கொள்கைக்கான (NEP) வரைவு தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட்டார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் (NEET) உள்ளிட்ட தேர்வுகளை நடத்த ‘தேசிய தேர்வு முகமை’ (NTA) உருவாக்கம் மற்றும் ஐ.ஐ.எம் (IIM) நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவரது காலத்தில், 2018 மார்ச் மாதம் சி.பி.எஸ்.இ (CBSE) 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12-ம் வகுப்பு பொருளாதார வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்றால் அவர்களை ‘ஃபெயில்’ ஆக்கலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

ரமேஷ் போக்ரியால் (மே 30, 2019 – ஜூலை 7, 2021)

இவரது பதவிக் காலத்தில் தான் ‘மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்’ அதிகாரப்பூர்வமாக ‘கல்வி அமைச்சகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்தி 5+3+3+4 பள்ளி முறை, பல்துறை உயர்கல்வி மற்றும் தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் போன்றவற்றை கொண்டுவந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கல்வித் துறை பாதிக்கப்பட்டபோது, ‘திக்ஷா’ (DIKSHA), ‘ஸ்வயம்’ (SWAYAM) மற்றும் ‘பி.எம் இ-வித்யா’ (PM eVIDYA) போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆன்லைன் கல்வியை முன்னெடுத்தார். உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 2021-இல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

தர்மேந்திர பிரதான் (ஜூலை 7, 2021 – ஜூலை 25, 2026)

பதவியேற்ற சில மாதங்களிலேயே நீட்-யுஜி (NEET-UG 2021) தேர்வு வினாத்தாள் கசிவு புகார்களை எதிர்கொண்டார். புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்திய இவர், ‘பி.எம் ஸ்ரீ’ (PM SHRI) பள்ளித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பலமொழி வழிக் கல்வியை ஊக்குவித்த இவர் கொண்டு வந்த மூன்று மொழி கொள்கை திட்டம், தமிழ்நாடு அரசுடன் பெரும் அரசியல் மற்றும் கொள்கை ரீதியிலான மோதலுக்கு வழிவகுத்தது. ‘இந்தி திணிப்பு’ எனத் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது.

யு.ஜி.சி (UGC), ஏ.ஐ.சி.டி.இ (AICTE), என்.சி.டி.இ (NCTE) ஆகிய உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒன்றிணைத்து ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா’ என்ற ஒரே அமைப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பிரஹலாத் ஜோஷி (ஜூலை 25, 2026 – …)

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *