வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.
செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம். என் நாத்தனார் மேனிலைப் பள்ளி ஆசிரியையாக பணியில் இருக்கிறாள். காலையில் அவளை வாழ்த்தினேன். அவளுடைய பழைய மாணவி, நீங்கள் கெமிஸ்ட்ரி மட்டும் நடத்தவில்லை. வாழ்க்கைப் பாடமும் எடுத்தீர்கள்.
சரியான நேரத்தில் என்னை தட்டிக் கொட்டி சரி செய்து என் வாழ்க்கையை சீராக்கினீர்கள். உங்களை என்னால் மறக்கவே முடியாது. நன்றி மறக்க மாட்டேன் என்று அவளைப் பற்றி உருகி உருகி பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள். உண்மையிலேயே மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது அந்த மாணவியின் பதிவு.
பதின்பருவ வயதில் இருக்கும் மாணவிகளை சமாளித்து அவர்களை நல்வழிப்படுத்தி நன்றாக படிக்க வைத்து அவர்கள் எதிர்காலம் சிறக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
மனித உயிர்களுடன் பணியாற்றுவதால் தான் ஆசிரியர்களும் செவிலியரும் குடியரசு தலைவரின் பாராட்டும் பத்திரமும் கொடுத்து கவுரவிக்கப்படுகிறார்கள்.

என் பதின் பருவத்தில் விடுதியின் வார்டன் மேடம் எப்போதும் சொல்லுவார்கள் “ஒரே ஒரு டீனேஜ் பெண்ணை உன் வீட்டில் சமாளிக்க முடியாமல் இங்கே கொண்டு விட்டிருக்கிறார்கள். நான் இத்தனை பெண்களை சமாளிக்கிறேன். நீ ஒழுக்கமாக இருந்தால் என் பெண் நல்லவள். எங்கள் வளர்ப்பு நல்லது.