'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

Spread the love

`பாட்டிலுக்கு 10 ரூபாய்…’ என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய் பாடியது பயங்கர வைரல். செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை ‘செல்பி புள்ள’ பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள் தவெகவினர். தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதல்வராகி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும்.டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகமாகவே வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய்
தவெக தலைவர் விஜய்

டாஸ்மாக்கில் வாங்கப்படும் அந்த 10 ரூபாயை வெறும் ஊழல் என்று குறுகிய பார்வையில் மட்டும் கடந்துவிட முடியாது. ஒவ்வொரு டாஸ்மாக்குக்கு பின்னாலும் பெரிய கதையே இருக்கிறது.

இதுதொடர்பாக டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் ஊழியர்கள், சூப்பர்வைசர்கள், அவர்களுக்கான தொழிற்சங்கங்கள் என நிறைய பேரிடம் பேசினோம். ஒரு கதைக்கு எப்போதும் பல பக்கங்கள் இருக்கும். டாஸ்மாக்கிற்கு உள்ளிருக்கும் இவர்கள் சொல்லும் ‘பாட்டிலுக்கு 10 ரூபாய் கதை…’ நமக்கு அரசு இயந்திரத்தின் மீதே நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் 2 சேல்ஸ்மேன், 1சூப்பர்வைசர் என பணியில் இருக்கிறார்கள். 4 லட்சம் வரைக்கும் வியாபாரம் செய்யும் கடைகளில் 5-6 சேல்ஸ்மேன்கள் 1 அசிஸ்டண்ட் சேல்ஸ்மேன் 2 சூப்பர்வைசர்கள் வரை இருக்கிறார்கள். இப்படி கடைகளின் வியாபாரத்தை பொறுத்து வேலை செய்யும் பணியாட்களின் எண்ணிக்கை மாறுபடும். இதில் சூப்பர்வைசருக்கு மாத சம்பளம் பிடித்தம் போக 14518 ரூபாய். சேல்ஸ்மேனுக்கு 12476 ரூபாய். அசிஸ்டண்ட் சேல்ஸ்மேனுக்கு 11429 ரூபாய் மட்டுமே சம்பளம். 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களுக்கே இதுதான் நிலைமை. கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதற்கான அடிப்படை காரணமே இந்த சொற்ப சம்பளத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

டாஸ்மாக் கடை

2016 க்கு முன்பு வரைக்கும் ஒரு முழு பாட்டிலை விற்பதோடு, சில்லரைக்கு மதுவை விற்கும் பழக்கமும் டாஸ்மாக்கில் இருந்திருக்கிறது. அதாவது, 140 ரூபாய் மதிப்புள்ள ஒரு முழு சரக்கு பாட்டிலை உடைத்து பாதியை 75 ரூபாய்க்கு ஊற்றி விற்றிருக்கிறார்கள். கூடுதலாக கிடைக்கும் இந்த 5 ரூபாய் கமிஷன். 2016 க்குப் பிறகு கிடுக்குப்பிடியான நெறிமுறைகளால் பாட்டிலை உடைத்து விற்கும் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் ஏரியாக்களை பொறுத்து பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வாங்கும் வழக்கம் உருவாகியிருக்கிறது.

கடையில் எக்ஸ்ட்ராவாக வாங்கும் இந்த 10 ரூபாய் முழுவதும் சேல்ஸ்மேனுக்கும் சூப்பர்வைசருக்குமே போய்விடும் என தப்புக் கணக்கு போடக்கூடாது. இதிலும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது.

மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மது பாட்டில்கள் அங்கிருந்து குடோன்களுக்கு கொண்டு வரப்படும். குடோன்களிலிருந்து கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும். இந்த சங்கிலியில் தொழிற்சாலையிலிருந்து குடோனுக்கு சரக்கு வரும் வழியில் பாட்டில்கள் சேதமடைந்தால் அதற்கான சேதார செலவை டாஸ்மாக் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், குடோனிலிருந்து கடைக்கு செல்லும் வழியில் பாட்டில்கள் சேதாரமடைந்தால் அதற்கான பொறுப்பை கடையை நடத்தும் ஊழியர்கள்தான் ஏற்க வேண்டும்.

சராசரியாக வியாபாரம் உள்ள ஒரு கடைக்கு வாரம் 2 முறை லோடு இறங்கும். 1 லோடில் 200 முதல் 600 பெட்டிகள் வரை இருக்கும். இந்த பெட்டிகளை இறக்கி வைக்க லோடு மேன்களுக்கு ஒரு பெட்டிக்கு 10 ரூபாய் வரை கூலியாக வழங்க வேண்டும். இதற்கான பொறுப்பையும் டாஸ்மாக் நிறுவனம் ஏற்காது. கடையை நடத்தும் ஊழியர்கள்தான் ஏற்க வேண்டும்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடைகள் இயங்கும் இடத்துக்கே பெரிய கதை இருக்கிறது. 2017 இல் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் என 2300 கடைகளை தமிழக அரசு மூடியது. அந்த கடைகளை வேறு இடங்களில் திறக்க வேண்டி வரும்போது அதற்கான இடத்தை ஊழியர்களையே பிடித்து தருமாறு வாய்மொழி உத்தரவிட்டது டாஸ்மாக் நிறுவனம். டாஸ்மாக்குக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். அப்படி கொடுக்க தயாராக இருப்போரும் அதிகப்படியான வாடகையையே கோருவர். அரசு ஒரு கடையின் இருப்பிடத்தை பொறுத்து 3000 முதல் 8000 ரூபாய் வரை மட்டுமே வாடகை கட்டணமாக ஒதுக்குகிறது. இதற்கு மேல் ஆகும் வாடகை செலவையும் கடையை நடத்தும் ஊழியர்களே ஏற்க வேண்டும். கடைக்கான கரண்ட் பில்லுக்கும் இதே கதைதான். குறிப்பிட்ட தொகையை மட்டுமே அரசு வழங்கும். எஞ்சிய தொகையை கடையை நடத்துவோரே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த இதரச் செலவுகளை சமாளிக்கவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்பது டாஸ்மாக் ஊழியர்களின் வாதம்.

இப்படியொரு நிலையில்தான் 2023 இல் நீலகிரி மாவட்டத்தை முன்வைத்து, ‘பாட்டில்களை பொதுவெளியில் தூக்கி வீசுவதை தவிர்க்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை பின்பற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களுக்கும் காலி பாட்டில்களை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பாட்டிலை வாங்கும் வாடிக்கையாளர் ஏற்கனவே 10 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும். காலி பாட்டில் விதிமுறையால் இன்னொரு 10 ரூபாயை சேர்த்துக் கொடுக்கும் சூழலும் உருவானது. ஆக, ஒரு வாடிக்கையாளர் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலி பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

விஜய்
விஜய்

இதுவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை கொடுத்தது. காலி பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ய வேண்டும். திரும்பக் கொடுக்கப்படும் காலி பாட்டில்களை பத்திரமாக பாதுகாத்து வைத்து ஒப்பந்தத்தாரரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பணியை செய்ய கூடுதலாக தேவைப்படும் வேலையாளுக்கும் இடத்துக்கும் கடையின் ஊழியர்களே பொறுப்பு. இத்தனை விவகாரங்களுக்கும் சேர்த்துதான் அந்த 10 ரூபாயை கூடுதலாக வாங்குகிறோம் என்கின்றனர்.

எனில், இதில் ஊழலே இல்லையா என்றால் அதுவும் இல்லை. இந்த 10 ரூபாயில் 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சமாக செல்கிறதாம் . டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த பணமெல்லாம் செல்வதாக கூறுகின்றனர். ஒவ்வொரு 20 கடைக்கும் கமிஷனை வசூல் செய்ய இந்த அதிகாரிகள் புரோக்கர்களை நியமித்திருப்பதாகவும் கூறுகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். ஒரு கடையில் இருந்து மட்டுமே மாதம் சில லட்சங்கள் வரைக்கும் இந்த அதிகாரிகளுக்கு கமிஷனாக செல்வதாக குமுறுகின்றனர் ஊழியர்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் புதிய அரசு அமைந்த பிறகு சில District Manager கள் ஊழியர்களிடம், ‘பாட்டிலுக்கு கூடுதலாக எந்த தொகையும் வாங்கமாட்டேன். அப்படி வாங்கினால் டாஸ்மாக் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுவேன்’ என கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். கையெழுத்து வாங்கிவிட்டு கூறியதுதான் ஹைலைட் என்கின்றனர். ‘இதெல்லாம் கண்துடைப்புக்குதான். நீ பார்த்து பத்திரமா வாங்கி வித்துக்கோ’ என கமிஷனில் துண்டு விழக்கூடாது என அறிவுரையும் கூறி சென்றிருக்கிறார்கள்.

விஜய்

நாங்கள் வாங்கும் 10 ரூபாயில் எங்கள் கையில் 1 ரூபாய் நின்றால் அதிசயம். ஆனால், மக்கள் 9 ரூபாய் கொள்ளைக்கு காரணமாக இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் அத்தனை பழியையும் ஊழியர்கள் மீதுதான் போடுகின்றனர். இதரச் செலவுகளை அரசு ஏற்றுவிட்டு, மற்ற துறைகளை போல எங்களின் அனுபவத்துக்கு ஏற்ற நியாயமான சம்பளத்தை அரசு கொடுத்தால் நாங்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், கமிஷன் வாங்கி பழகிய அதிகாரிகள் அதை நடக்கவிடுவார்களா என தெரியவில்லை என ஆற்றாமையோடு கூறுகின்றனர்.

‘பாட்டிலுக்கு 10 ரூபாய்…’ என ராகமாக பாட்டுப் பாடி கேள்வி கேட்பது எளிது. நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் இந்த அதிகாரிகளின் கயமைத் தனத்தையும் உழைப்புச் சுரண்டலையும் சமூக பார்வையோடு புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல. பாட்டு பாடிய முதல்வர் உண்மையான பிரச்னைக்கு முகம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *