இத்தகைய கருத்துக்களைக் கூறுவதால் ஆளுங்கட்சியுடன் கூட்டணி அல்லது நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாகப் பொருளாகாது. கடந்த கால ஆட்சியாளர்கள் நம் ஆலோசனைகளைக் கேட்காமல் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் செயல்பட்டனர். ஆனால் தற்போதைய அரசு நாம் சொல்லும் மக்கள் நலத் திட்டங்களைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரையும், நீர்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து அரசியல் ரீதியான அழுத்தங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சட்டப் போராட்டங்களையும், வழக்குகளையும் தொடுக்க வேண்டும். டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு, 2028 கர்நாடக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அங்குள்ள நிலைப்பாட்டையே ஆதரிக்கும் என்பதால், நாம் இன்னும் விழிப்புடனும் அவசரத்துடனும் செயல்பட வேண்டும்.