பாமக-தவெக கூட்டணி…தவெக அமைச்சரவையில் இடமா? சௌமியா சொன்ன அதிரடியான தகவல்! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பா.ம.க. இணையவுள்ளதாகவும், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத சூழலில், அதிக இடங்களைக் கைப்பற்றிய த.வெ.க. (107 தொகுதிகள்) கூட்டணி அரசை அமைத்தது. இந்த அரசுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இருப்பினும், தற்போதைய சூழலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் த.வெ.க. கூட்டணியில் இல்லை என்று அறிவித்துள்ளன. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலம் 109 ஆக மட்டுமே உயரும் என்பதால், ஆட்சியைத் தக்கவைக்க மேலும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் நிலவுகிறது.

இந்தச் சூழலில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (4 எம்.எல்.ஏ-க்கள்) த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் த.வெ.க. அரசை விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபகாலமாக அமைதியான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் இந்தக் கூட்டணி உறுதியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், இடைத்தேர்தலுக்குப் பின் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, பா.ம.க. கூட்டணிக்குள் வந்தால் சௌமியா அன்புமணிக்கு பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனம் ஆகிய துறைகளில் ஒன்று ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணியிடம் த.வெ.க. அமைச்சரவையில் அவர் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “அவையெல்லாம் முற்றிலும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளுக்கு ஊடகங்களும் பொதுமக்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்” என்று கூ]றி பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *